பல்வேறு ஏளனங்களையும் நெருக்கடிகளையும் புன்னகையால் கடந்து இன்று தமிழ்குரல் சாதனை படைத்திருப்பதாக அதன் பணிப்பாளர் பரமநாதன் குமாரசிங்கம் தெரிவித்தார்.
நேற்றைய தினம், தமிழ்குரல் வானொலியின் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் வருட பூர்த்திவிழாவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ்குரல் வானொலியை கிளிநொச்சியில் ஆரம்பித்தபோது இந்த ஊடகத்தை எத்தனை நாட்களுக்கு நடத்தப் போகிறீர்கள்? என்று சிலர் ஏளனம் செய்தபோது சிறு புன்னகையை மாத்திரம் பதிலாக வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
அது மாத்திரமின்றி பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டதுடன், உண்மைக்குப் புறம்பான அவதூறுகளையும் சந்திக்க நேர்ந்ததாகவும் எனினும், தமிழ் மக்களின் குரலாக உறுதியுடன் பயணித்த தமிழ் குரல் இன்று தனது சிறகுகளை விரித்து உலகளவில் பறப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் பல்வேறு நெருக்கடிகளை கடந்து ஓராண்டை தமிழ்குரல் வானொலி நிறைவு செய்துள்ள நிலையில், இன்று இணையத்திலும் சமூக ஊடகத்திலும் பெரும் வரவேற்பை பெற்று சாதனையை எட்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியில் உள்ள தமிழ்குரல் கலையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூத்த படைப்பாளர் தமிழ்க்கவி மற்றும் ஈழத்து கவிஞர் தீபச்செல்வன் முதலியோர் சிறப்பு வருகையாளர்களாக கலந்து கொண்டனர்.
தாயகத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளரும் தமிழ்க்குரல் குழுமத்தின் இணைப்பாளருமான திருமாறன் அவர்களின் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் தமிழ்குரலின் சிரேஷ்ட அறிவிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களுடன் இளைய அறிவிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
அத்துடன் தமிழ்க்குரலின் வளர்ச்சிக்கு பங்காற்றிய பணியாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. தமிழ்க் குரலின் ஆளுமை விருது பணிப்பாளர் குமாரசிங்கத்திற்கும், பல்துறை வித்தகர் விருது சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமாறனிற்கும் வழக்கப்பட்டது.
அத்துடன் நட்சத்திர அறிவிப்பாளர் விருது சிரேஷ்ட அறிவிப்பாளர் கொற்றவைக்கும், தமிழ்க்குரலின் பெருமை என்ற விருது தமிழ்க்குரல் வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளர் செல்விக்கும் சிறந்த அறிவிப்பாளர் விருது இளைய அறிவிப்பாளர் துஷிக்காவிற்கும் வழங்கப்பட்டது. விருதுகளை கவிஞர் தீபச்செல்வன், தமிழ்க்கவி ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.





