இனப்பலமே ஆட்சியுரிமைக்கான அத்திவாரம் – மாவை

maavai senathirajah
maavai senathirajah

இனப்பலம்தான் எமது தேசத்தையும், மக்களையும் பாதுகாத்து ஆட்சியுரிமையை வழங்குவதற்கான அத்திவாரமாக இருக்கக்கூடும். என்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். சிங்கள குடியேற்றங்களிற்கெதிராக வவுனியா வடக்கில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா வடக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட நெடுங்கேணி பிரதேசத்தில் போராட்டம் ஒன்று தமிழ் மக்கள் பிரதிநிதிகளினால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களுடைய பாரம்பரிய தேசம் கடந்த 70 ஆண்டுகளாகவும், இப்போதைய ஆட்சியினாலும், சிங்கள குடியேற்றங்களாலும், ஆக்கிரமிப்புக்களினாலும் மாற்றியமைக்கப்படுகிறது.
தமிழர்களுடைய பெரும்பான்மை இனப்பிரதிநிதித்துவம், இனப்பரம்பல் சீர்குலைக்கப்பட்டு அவர்களுடைய இன அடையாளம் அழிக்கப்படும் நடவடிக்கை இப்போதய காலப்பகுதியில் தீவிரமாக முன் எடுக்கப்படுகிறது. தமிழ்மக்களுடைய தேசம் , கலாச்சாரம், மதம் எல்லாமே பௌத்த சிங்கள மயமாக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு தமிழ் மக்களை அழிக்கின்ற தமிழ் தேசத்தை அழித்து விடுகின்ற நடவடிக்கையை இந்த ஆட்சியும் செய்து வருகிறது.
அதனை விட தமிழ் பிரதேசங்களோடு அயலில் இருக்கின்ற சிங்கள கிராமங்களை இணைப்பதன் மூலம் தமிழர்களுடைய பெரும்பான்மையை அழித்து சீர்குலைத்து தமிழ்இனம் என்கிற அந்த பதத்தை அல்லது இனப்பரம்பலையே இல்லாமல் செய்கிற நடவடிக்கைகளை தீவிரமடைந்துள்ளது.

கோட்டபாய ஆட்சியில் தமிழர்களுடைய தேசம் சிங்கள மயமாக்கப்பட்டு, பௌத்த தேசமாக்கப்படுவதற்கு எதிராக நாம் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டியதுடன், தமிழின அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம். 

எமது ஆட்சியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் சொந்த மண்ணிலே, சொந்த கிராமத்திலே, சொந்த தேசத்திலே தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்ற உரிமைக்காக தமிழ்மக்கள் வடக்கு கிழக்கு முழுவதும்  இவ்வாறான போராட்டங்களை 70 வருடங்களாக நடத்தி வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றைக்கும் எல்லைக் கிராமமாக இருக்கின்ற வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் ஒரு போராட்டத்தை இப் பிரதேச மக்களும் வவுனியா பிரதேசத்தை சேர்ந்த மக்களும் ஒன்று கூடி அரசுக்கு தமது வேண்டுகோளை விடுக்கிறார்கள்.

சிங்கள குடியேற்றங்களை மீளப்பெற வேண்டும் , சிங்கள குடியேற்றங்களை நிறுத்த வேண்டும். தமிழர்களுடைய பிரதேசத்தையும் அவர்களுடைய இனப்பலத்தையும் நிருபிக்க வேண்டும். அந்த இனப்பலம்தான் எமது தேசத்தையும்  மக்களையும்  பாதுகாக்க கூடிய ஆட்சியுரிமை வழங்க அத்திவாரமாக இருக்கக்கூடும். 

அத்துடன் இந்த அரசாங்கம் விலைவாசி உயர்வை மேலும் மேலும் அதிகரிக்கின்ற நடவடிக்கையை எடுத்து வருகிறது. அரசாங்க ஊழியர்களாக இருப்பவர்களுக்கு சம்பளம் போதாமல் இருக்கிறது. விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உரம் வழங்கப்படுவதில்லை. அவர்களுடைய உற்பத்திகளை விற்பனை செய்ய முடியவில்லை. 

அதேபோல் கடல் தொழில்புரியும் மீனவர்கள் மிகச் செல்வச்செழிப்புடன் , வளமாக வாழ்ந்தவர்கள் அவர்களுடைய மீன் வளம் அழிக்கப்படுகிறது. அவர்கள் அன்றாட வாழ்க்கையையே வாழமுடியாமல் அவர்களது தொழிலை செய்யமுடியாமல் வறுமைக்கோட்டின் கீழ் பசி பட்டினியோடு வாழ்ந்து சாவை நெருங்கி கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது வரவு செலவு திட்டம் அறிவிக்கப்பட்டாலும் இந்த விலைவாசி மேலும் மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்தான் இந்த வரவு செலவு திட்டத்தில் காணப்படுகிறது. இந்த வரவு செலவு திட்டத்தினால் எமது மக்களுடைய பிரச்சினைகள் நெருக்கடிகள் விலைவாசி உயர்வு போன்றவை எந்த வகையிலும் தீர்க்கப்பட முடியாது என்பதை மிகத் தெளிவாக சொல்லி கொள்ள விரும்புகிறோம். ஆகவே எமது பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எமது அடையாளம், உரிமை என்பன நிலைநிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்னிறுத்துகின்றோம் என்றார்.