பென்றித் தோட்ட அதிகாரியை பணிநீக்கம் செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

1637228733 5112376 hirunews
1637228733 5112376 hirunews

தோட்ட அதிகாரியை பணிநீக்கம் செய்யுமாறு கோரி அவிசாவளை − பென்றித் தோட்ட மக்கள், ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

கொழும்பு − அவிசாவளைப் பிரதான வீதியின் பென்றித் தோட்டத்திற்குச் செல்லும் வீதியை மறித்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தத் தோட்டத்தில், பெருந்தோட்ட நிறுவனத்தின் அனுமதியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றை தோட்ட அதிகாரி பலவந்தமாக உடைத்ததாகவும், அதனைத் தடுத்த வயோதிப பெண்ணொருவர் தோட்ட அதிகாரியால் தாக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் பெண்ணின் புதல்வர்கள் தோட்ட அதிகாரியைத் தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த தோட்ட அதிகாரி மற்றும் வயோதிபப் பெண் ஆகியோர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னர், தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்திக் கொண்ட சிவில் உடையில் பிரவேசித்த சிலர், குறித்த வீட்டை மீளவும் உடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பிற்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கும் காவல்துறையினர் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று (18) முற்பகல் அவிசாவளை – பென்றித் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.