இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஸ்வரன் – டக்ளஸ் சந்திப்பு!

WhatsApp Image 2021 11 26 at 12.18.51 960x719 1
WhatsApp Image 2021 11 26 at 12.18.51 960x719 1

இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஸ்வரனுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது, இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருதல், இந்திய – இலங்கை மீனவர்கள் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்படவுள்ள இலங்கையர்களுக்கு பயண ஏற்பாடுகளை இலவசமாக வழங்குவதற்கும் பொருட்களை எற்றிவருவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

அதன் செலவீனங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதல் கட்டமாகத் தலா 30,000 ரூபாவை வழங்குவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் சுமார் 7,000 குடும்பங்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த முயற்சிகளை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கு வருவதற்கு விருப்பம் தெரிவிக்கும் இலங்கை ஏதிலிகளை, தங்களுடைய பூர்வீக இடங்களில் மீள்குடியேற்றி இயல்பு வாழ்கையை தொடர்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் உறுதியளித்ததாகக் கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.