நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டும் – அதாவுல்லாஹ்

athavullah
athavullah

சேதனப் பசளை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், பால் உற்பத்தி தொடர்பிலும் அரசாங்கம்  அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பசுப் பாலை பெறக்கூடிய சகல வசதிகளும் எமது நாட்டில் உள்ளன என ஆளும் கட்சி உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை மீறப்பட்டிருப்பது தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

சேதனப் பசளை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில்,  பால் உற்பத்தி தொடர்பிலும் அரசாங்கம்  அதிக கவனம் செலுத்த வேண்டும். 

ஆட்டுப்பால், ஒட்டகப்பால் ஆகியவற்றை எம்மால் பெற முடியாவிட்டாலும் பசுப் பாலை பெறக்கூடிய சகல வசதிகளும் எமது நாட்டில் உள்ளன.

தேவையான சிறந்த புல் வயல்கள், அதற்கான விவசாயிகளும் எமது நாட்டில் உள்ளனர். அதேவேளை மாட்டிலிருந்து பால் மட்டுமன்றி உரம், சாணம், சிறுநீர் என பல்வேறு தேவைகளுக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதனைக் கவனத்தில் கொண்டு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு விரிவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எமது நாட்டில் சிறந்த மழைவீழ்ச்சி போதிய தண்ணீர் காணப்படுகின்ற நிலையிலும் தண்ணீரையும் பணம் கொடுத்து வாங்கும் நிலை காணப்படுகின்றது. 

அதேபோன்று பால் ஒரு கோப்பையை எமது எதிர்கால சந்ததிகளுக்கு நாம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் விவசாயத்துறை பெரும் முன்னேற்றம் கண்டது. விவசாயிகளை பலப்படுத்திய தலைவராக அவரை குறிப்பிடமுடியும்.

தற்போது நஞ்சற்ற உணவு உற்பத்தி,நீண்டகால இரசாயன உர பிரச்சினை அதன் மூலம் ஏற்படும் நோய்கள் பற்றி பேசப்பட்டு வருகின்றன. 

இரசாயன உரத்திற்கு பதிலாக சேதன பசளையை ஊக்குவிப்பதற்கு அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு ஜனாதிபதி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதற்கான பொறுப்பு அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும்  சசீந்ர ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அதே நிலையில் உலகில் உணவு நெருக்கடி ஏற்படலாம் என்றும் ஆருடம் கூறப்படுகின்றது. இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கு சிறந்த வேலைத்திட்டங்கள் அவசியம் என்றார்.