முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்!முல்லைத்தீவு ஊடக அமையம் கண்டனம்

USER SCOPED TEMP DATA c4d00805073b5aa5f629837afe4973c4ae27b0e4f9564a76d531d8a71fdddcf0
USER SCOPED TEMP DATA c4d00805073b5aa5f629837afe4973c4ae27b0e4f9564a76d531d8a71fdddcf0

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட  சம்பவத்துக்கு முல்லைத்தீவு ஊடக அமையம் தனது கடுமையான கண்டனத்துடன் கூடிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான  விஸ்வலிங்கம் விஸவச்சந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து  இன்று 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில்  பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட் டது

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின் பல்வேறு ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,அரசியல் பிரமுகர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள்,பொதுமக்கள்  ஆகியோர்  ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஊடகவியலாளர் மீதான  இராணுவத்தினரின் மிலேச்சதனமான  சித்திரவதையை வன்மையாக கண்டிக்கின்றோம்! என  முல்லைத்தீவு ஊடக அமையம் தனது கடுமையான கண்டணத்துடன் கூடிய அறிக்கையினை வெளியிட்டது

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளரும் சுயாதீன   ஊடகவியலாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன்  அவர்கள்  27.11.21 அன்று   காலை முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ‘முள்ளிவாய்க்கால்’ எனும் அடையாளப் பெயர்பலகையினை செய்தி அறிக்கையிடலுக்காக ஒளிப்படம்  எடுத்துக்கொண்டிருந்த வேளை இராணுவத்தினர் ஊடக  பணிக்கு இடையூறு   விளைவித்ததுடன் ஊடகவியலாளர் மீது முள்ளுக்கம்பி சுற்றப்பட்ட பனை மட்டையால் மிக மூர்க்கதனமாக தாக்குல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்துள்ளனர்.

இதனால் வயிற்று பகுதி மற்றும் கை,கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த நிலையில்   முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் ஊடகவியலாளரின் உடமைகளான ஒளிப்படக்கருவி,கையடக்கதொலைபேசி என்பன படையினரால் பறிக்கப்பட்டுள்ளதுடன் உந்துருளியும் சேதமாக்கப்பட்டுள்ளது.

பல சவால்களுக்கும்,அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் மிக துணிச்சலுடன் ஊடகபணியினை ஆற்றிவந்த வி.விஸ்வச்சந்திரன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமையானது மிக மோசமான மனிதஉரிமை மீறல் என்பதுடன் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும்.

சமகால அடிமைத்துவம், அதன் காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்த ஐ நா சிறப்பு பிரதிநிதி டொமோயா ஒபோகாடா இலங்கையில் உள்ள நிலையில், உள்நாட்டுப் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டு, இன்னும் முற்றாக மீளாத முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீதான இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தொடர்ச்சியாக நாடெங்கும், குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியில் பக்கசார்பற்ற வகையில் செய்திகளை  சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இது குறித்த முறைப்பாடுகள் காவற்துறை மற்றும் ஜனாதிபதி வரையிலான உயர்மட்டத்திற்கு அளிக்கப்பட்ட போதும், இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. அரசின் இந்த நிலைப்பாடே, எந்த குற்றத்தையும் செய்துவிட்டு அதிலிருந்து தப்பிவிடலாம் என்கிற எண்ண போக்கை ஏற்படுத்தியுள்ளது. முறைப்பாடு அளிக்கப்படும் போது அது விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றிருக்காது.என்பதோடு கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு திட்டமிட்டுச் செய்கிறது.

(கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் பல்வேறு ஊடகவியலாளர்கள் மீது இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரால் தொடர்ச்சியான தாக்குதல் அச்சுறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் அதற்கான சரியான நீதி விசாரணைகள் உரிய தரப்பினால் முன்னெடுக்கப்படாமையே இன்றைய தினம் இன்னுமொரு ஊடகவியலாளர் மிலேச்சதனமாக சித்திரவதைக்கு உள்ளாகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.)

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறைமீது பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் சுயாதீனமானதும் வினைத்திறனானதுமான ஊடக செயற்பாட்டிற்கு அடிக்கப்பட்ட சாவு மணியாகும்.

கடந்த காலங்களில் 44 தமிழ் ஊடகவியலாளர் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் கொலைசெய்யப்பட்டும் அதற்கான நீதிகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக தமிழ் இன அடையாளத்தினை கொண்ட ஊடகவியலாளர்கள் என்ற காரணத்தினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும்,சித்திரவதைகளும் தமிழ் ஊடக பரப்பினை சேர்ந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவது கவலைக்குரிய விடையமாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலார்களின் ஊடக பணிக்கு இடையூறு  விளைவிக்கும்,அச்சுறுத்தல் மேற்கொள்ளும் சித்திரவதைக்கு உட்படுத்தும்  இராணுவத்தின் செயற்பாட்டை முல்லைத்தீவு ஊடக அமையம் வன்மையாக கண்டிப்பதுடன் ஊடகவியலார்களின் செயற்பாடுகளில் அக்கறையுள்ள உரியதரப்புக்களும், சர்வதேச அமைப்புக்களும், சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்  வலியுறுத்தி நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது