சஜித் அணியால் இடைநின்ற நாடாளுமன்ற அமர்வு!

sajith 5
sajith 5

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டமையினால் இன்றைய நாடாளுமன்ற அமர்வு மதியம் 12.30க்கு இடைநிறுத்தப்பட்டது.

பாதீடு மீதான குழு நிலை விவாதம் 12 ஆவது நாளாகவும் இன்று (06) இடம்பெற்றது.

இன்றைய தினம் வெட்டுவதற்கான பிரேரணையை முன்வைப்பதற்காகப் பெயரிடப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றிற்கு வருகை தராமையினால் நிலையியல் கட்டளைச்சட்டத்தின் கீழ் திருத்தத்தை மாத்திரம் முன்வைப்பதற்கு நேரிட்டது.

வெட்டுவதற்கான பிரேரணை முன்வைக்கப்படாமல் குழுநிலை விவாதத்தை முன்னெடுக்க முடியாமையால் மதிய நேர நாடாளுமன்ற நடவடிக்கை கைவிடப்பட்டு சபை அமர்வு நாளை (07) முற்பகல் 9.30 வரையில் பிற்படுவதற்கு சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட சில இராஜாங்க அமைச்சுகள் தொடர்பாக இன்றைய குழுநிலை விவாதத்தில் விவாதிக்கப்படவிருந்தது.

அத்துடன், நாளைய தினம் சுற்றாடல், வனஜீவராசிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சுகள் தொடர்பில் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்று முற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர், நாடாளுமன்றில் கருத்துரைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அண்மையில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்குக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த குழுவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்ற பாதீட்டுக்கான குழுநிலை விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார உரையாற்றிய போது, அதற்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டிருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணித்த ஐக்கிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்யும் போது இதனை விடவும் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.