இராஜாங்க அமைச்சு, 2 அரச நிறுவனங்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலை!

9eeee126 9a341728 human rights commission 850 850x460 acf cropped
9eeee126 9a341728 human rights commission 850 850x460 acf cropped

எரிவாயு விவகாரத்தில் அரச நிறுவனங்களின் அலட்சியம் தொடர்பில் விசாரிக்குமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உட்பட பல சமூக ஆர்வலர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய, இரண்டு அரச நிறுவனங்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சினதும் பிரதிநிதிகள் இன்று (09) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆகியோரை இன்று காலை 11 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மற்றைய பண்டங்களைப் போன்றே எரிவாயு கொள்கலன்களுக்கும், எரிவாயு உள்ளீடு செய்யப்பட்ட திகதி மற்றும் உள்ளடக்கம் என்பன குறிப்பிடப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகளும் இதன்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதற்கிடையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எரிவாயு விபத்துக்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில், இம்மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் சந்தைக்கு விநிதியோகிக்கப்பட்ட  முத்திரை அகற்றப்படாத அனைத்து எரிவாயு கொள்கலன்களையும் மீளப் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனால் தாங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக எரிவாயு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.