தேர்தல்கள் ஆணைக்குழுவின் உபாயமுறைத் திட்ட கருத்துக்களை பெற கலந்துரையாடல்!

election meeting 23
election meeting 23

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவானது எதிர்வரும் 2022ம் ஆண்டுதொடக்கம் 2025ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான உபாயமுறை திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த திட்டத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கருத்துக்களை  கேட்டறியும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தினால் ‘உபாயமுறைத் திட்டம் 2022-2025 மாவட்ட தரப்பு குழுக்களின் கருத்துக்களை  பெற்றுக் கொள்ளல் தொடர்பான கருத்தரங்கு’ இன்று(13) காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தால் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கா.காந்தீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல்களின் போதான தெரிவத்தாட்சி அலுவலருமான  க.விமலநாதன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

இதனூடாக தேர்தல் ஆணைக்குழுவானது தேர்தல் நடவடிக்கைகள் அதனுடன் இணைந்த செயற்பாடுகள், தேருநர் இடாப்பு மீளாய்வு, பொதுமக்கள் மற்றும் வாக்காளருக்காக மேற்கொள்ளக்கூடிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை உள்ளடக்கியதான பல்வேறு கருத்துக்களை எதிர்பாக்கின்றது.

இத்தகைய கருத்துக்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள், ஊடகவியலாளர்கள், பிரதேசசபைத் தவிசாளர் மற்றும் பல்வேறுபட்ட சமூக அமைப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக குழுக்கள் அமைக்கப்பட்டு அதனூடாக பல்வேறு கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. இவை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.