டிசம்பரில் ‘கொவிட் சுனாமி’ – சன்ன ஜயசுமன எச்சரிக்கை!

71d94977 5a5e5e9a bd7c3924 channa jayasumana 850x460 acf cropped 850x460 acf cropped
channa jayasumana

களியாட்டம், சமய நிகழ்வுகள் போன்றவற்றை சுகாதார கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் மாத்திரம் தடுத்து நிறுத்த முடியாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விடயங்களில் மக்கள் சரியான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில்லை என்பதையே கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் காட்டுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த செயலூக்கி (பூஸ்டர்) தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் டிசம்பரில் கொவிட் சுனாமியொன்றை எதிர்பார்க்கலாம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

அநுராதபுரத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பாரிய சனநெரிசல் ஏற்படக்கூடும், இதனால் உருவாகக்கூடிய ஆபத்துகளை குறைத்துக்கொள்ள செயலூக்கி தடுப்பூசியை எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாவிடின்,  டிசம்பரில் மற்றொரு ‘கொவிட் சுனாமி’ வரும் என்று அவர் கூறினார்.

மூன்றாவது கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற வதந்திகள் பொய்யானவை என்றும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதே நாட்டுக்காக தன்னால் செய்யக்கூடிய சிறந்த செயல் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.