வத்தளையில் கடலில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு!

Young man who went swimming drowns T24
Young man who went swimming drowns T24

வத்தளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட  ப்ரீத்திபுர கடலில் நீராடச் சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள், கடலலையால் அடித்துச் செல்லப்பட்டு  காணாமல்போன  நிலையில் இன்று  (13) காலை கடற்படையினரால் சடலமாக  மீட்கப்பட்டுள்ளனர்.

வத்தளை – எந்தேரமுல்ல பகுதியைச் சேர்ந்த, மஹர பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும்  கே.கே. ருவிந்த புன்சர (15) மற்றும் எம். சஞ்சித சந்தகெலும் (15) ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.

வத்தளை ப்ரீத்திபுர கடற்கரைக்கு நேற்று முன் தினம் ஞாயிறு (12) மாலை பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் சென்றுள்ளனர். அவர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில், அவர்களில் இருவர் கடலலையினால் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் காணாமல்போயுள்ளனர்.

காணாமல்போன மாணவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படை சுழியோடிகள் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டிருந்த நிலையில் இரு மாணவர்களும் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர். நீராட பொருத்தமற்ற பகுதியில் மாணவர்கள் நீராடியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.