நாட்டை அபிவிருத்தி செய்வதாயின் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்!

siththarthan
siththarthan

இந்நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக இருந்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பேச்சுவார்த்தைகளினூடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் சமகால அரசியல் கருத்துக்கள் தொடர்பில் இன்றைய தினம்(5) அவர் கருத்து தெரிவிக்கையில்,

“கோட்டாயவை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் குறிப்பாக இனப்பிரச்சனை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றார். இதன் காரணமாகவே நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரிற்கு மிகப் பெரிய அளவில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை.

நாடு அபிவிருத்தி அடைய வேண்டுமாக இருந்தால் உண்மையில் தமிழ் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். நாட்டில் ஒரு சுமுகமான நிலைமை ஏற்பட்டால் தான் வெளிநாடுகளும் முதலீடு செய்ய முன்வரும். அதனூடாக அபிவிருத்தி நோக்கி பயணிக்க முடியும்.

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆட்சியாளர்கள் எவ்வாறான கருத்துக்களையும் தெரிவிப்பினும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது அவசியமானது. அதற்காக நாங்கள் எங்களது செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு தான் வருகின்றோம்.

தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் சகோதரன் மஹிந்த ராஜபக்‌ஷ தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்து இந்தியா உட்பட பலருக்கும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை மூலம் ஜனாதிபதி பிரச்சனைகளைத் தீர்ப்பார் என்று நாங்கள் சொல்ல மாட்டோம. அவ்வாறு தீர்ப்பார் என்றும் நம்பிவில்லை. ஆனாலும் ஜனாதிபதி கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.

இதற்காக அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு பலமாகினால் மாத்திரமே சம பலத்துடன் அரசுடன் பேச இயலும். இதனடிப்படையில் ஜனாதிபதியுடன் பேச வேண்டுமென கட்சித் தலைவர் சம்மந்தர் ஐயா கேட்டிருக்கின்றார்.

ஆகவே வடகிழக்கு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எங்களுடன் பேசத் தான் வேண்டும். பேசாமல் இங்குகிருந்து தனியாக எதனையும் செய்ய முடியாது.

கடந்த காலங்களில் கடுமையான நிலைப்பாடுகளை கொண்டிருந்த சிங்கள தலைவர்கள் பின்பு அதிலிருந்து விலகி ஒப்பந்தங்களை எழுதிய சரித்திரங்களும் உண்டு. உதாரணத்திற்கு கடுமையான நிலைப்பாட்டை எடுத்த பண்டாரநாயக்க தந்தை செல்வாவுடன் ஒப்பந்தம் செய்தார்.

எனவே ஜனாதிபதி கடும் போக்கை பின்பற்றுகிறார் என்பதற்காக எங்கள் பிரச்சினையினை விட்டுவிட இயலாது. அதனைத் தீர்ப்பதற்கு எங்களால் இயன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உண்மையில் இந்த நாட்டை சரியான முறையில் முன்னேற்றி அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் தீர்வு வழங்கப்பட வேண்டியது முக்கியம். அதனை ஜனாதிபதி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” எ னதெரிவித்தார்.