எழுக தமிழ் ஆதரவு – கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிக்கை

69957354 408642956451902 4498792601188564992 n 1
69957354 408642956451902 4498792601188564992 n 1

எழுக தமிழ் நிகழ்வை ஆதரித்து கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் இன்று தனது அறிக்கையினை கொடுத்துள்ளது. குறித்த அறிக்கையில்

இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் முதன்மையடைய வேண்டியது காலத்தின் தேவையாகும். கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியமானது தமிழ் தேசிய நீதிப் போராட்டங்களிற்கு தன்னாலான பங்களிப்பை என்றுமே வழங்கி வருகின்றது. ஈழத் தமிழர்களின் மிகப் பெரும் நீதிக்கான குரலான எழுக தமிழிற்கு காலத்தின் தேவை உணர்ந்து நாம் பரிபூரண ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குகின்றோம்.

யுத்தத்திற்கு முன்னரும், தற்போதும் இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றுகின்ற துரோகங்களுக்கு ஈழத்தமிழர்கள் நாம் ஒன்றாய் குரல் கொடுக்காமையே இன்றைய எமது இந்நிலைக்குக் காரணமாகும். தமிழ்த்தேசியத்தில் பல கட்சிகளாய் பிளவுபட்டு நிற்கையில் நாம் நீதியினை வென்றெடுப்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கின்றது. தமிழர்களாகிய எங்களுக்குள் இருக்கும் நீண்ட இடைவெளிகளை தகர்த்தெறிவதாக எழுக தமிழ் நிகழ்வில் தமிழர்கள் நாம் அனைவரும் ஒரே தமிழ்த்தாய் பிள்ளைகளாய் ஒன்றிணைவோம், மூலை முடுக்குகளில் வாழும் தமிழர் மனங்களில் உறங்கிக் கிடக்கும் நீதிக்கான உணர்வுகளுக்காக, தட்டிக் கேட்கும் தன்மைக்காக அனைத்து தமிழர்களும் குரல் கொடுக்கும் அறவழிப் போராட்டமாய் எழுக தமிழ் பரிணமிக்க காத்திருக்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளில் எம் தமிழ் தலைமைகள் விலை போவது வேதனையளிக்கிறது. மாற்றத்தினை வேண்டி நிற்கும் எழுக தமிழில் நாம் கேட்பது தமிழர்களுக்கான நீதியைத்தான். வட கிழக்கில் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், தமிழ்களின் இன்றைய மற்றும் எதிர்கால இருப்பினைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை என பல விடயங்களில் இன்றும் இலங்கை அரசாங்கம் நீதியைத் தர மறுக்கின்றது

மாணவர் நாம் மிகப் பெரும் சக்தியாய் எழுக தமிழில் பங்கேற்க கடமைப்பட்டுள்ளோம். பேரணியின் சாதகமான பெறுபேறு தமிழனின் விடியலுக்கானது. எமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை மீண்டும் ஒரு முறை சர்வதேசத்திற்கு கூறிட இதுவே தகுந்த தருணமாகும். எனவே தமிழர்களின் உரிமைகளிளை வென்றெடுக்க கரம் சேர்க்கக் காத்திருக்கும் அனைத்து தமிழ் உறவுகளையும் புரட்டாதி 16 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகும் எழுக தமிழ் பேரணியில் ஒன்றாய் அணிதிரம் உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.