மாணவர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பின்றி செயற்பட்ட ஜனாதிபதி!

gota
gota

பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது சுதந்திரமான போராட்டத்திற்கு அனுமதிக்குமாறு ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,

மஹாபொல புலமைப்பரிசில் உதவித்தொகையை அதிகரித்தல் உள்ளிட்ட 06 வேண்டுகோள்களை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று (09) பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஊர்வலமாக வருகைதந்த மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இவ்விடயம் பற்றி அறிந்த ஜனாதிபதி மாணவர்களுக்கு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது அவர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வருகை தருவதற்கு வழிவிடுமாறு பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை வழங்கினார்.

மாணவர்களின் வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரை தெளிவுபடுத்திய அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை உடனடியாகப் பெற்றுக்கொண்டனர்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குரிய மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித் தொகையினை எதிர்வரும் திங்கட்கிழமை(13) செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

விரிவுரைகளுக்கான 80 சதவீத வரவினை பூர்த்தி செய்யாத மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசினை வழங்குதல், மாணவர் உதவித்தொகை மற்றும் மஹாபொல புலமைப்பரிசில் ஆகியவற்றை சமமான மட்டத்திற்கு கொண்டு வருதல், சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் தொடர்பான பிரச்சினைகள், மாணவர் உதவித்தொகையை வழங்கும்போது கருத்திற் கொள்ளப்படும் பெற்றோரின் வருமானத்தை 7 இலட்சம் வரை அதிகரித்தல், தொழில்புரியும் மக்களின் சம்பளத்தினை அதிகரித்தல் ஆகிய முன்மொழிவுகளுக்கு விரைவில் தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஒன்றுகூடியிருந்த மாணவர்கள் மிக அமைதியான முறையில் அங்கிருந்து கலைந்து சென்றனர்”

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹன அபேரத்ன, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.