‘எமது தலைவர் பிரபாகரன்’ – ஈபிடிபி உறுப்பினர்

.jpg
.jpg

“தேர்தல் வந்தால் புலிகளையும், புலிகளின் தலைவரையும் மதிப்பாக பேசி வாக்கை பெற்றுக்கொள்வார்கள். தேர்தல் முடிந்ததும், இப்படி பேசுவார்கள். அவர் சாதி தொடர்பாக என்னை அப்படி பேசினால், அந்த வட்டத்திற்குள் எமது தலைவர் பிரபாகரனும் அடங்குவார்.” என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் மு.ரெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

மாநகரசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அசிங்கங்கள் தொடர்பாக நேற்று ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மு.ரெமீடியஸ் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ் மாநகரசபையில் ஏற்பட்ட சிறு குழப்பநிலையினால், மக்கள் விரக்தி நிலைககு தள்ளப்படும் நிலையேற்பட்டது. இதற்காக மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்.

சில விடயங்களில் நாம் எதுவும் செய்ய முடியாது. தர்சானந்த் எப்பொழுதும் துறைசார்ந்தவர்களை தேவையற்ற விதமாக கதைப்பதும், தொழிலை இழிவாக கதைப்பதையும் வழக்கமாக கொண்டிருப்பவர்.

நான் அந்த சர்ச்சையை ஆரம்பிக்கவில்லை. எமது உறுப்பினர் ஒருவர்தான், தர்சானந்தின் முகநூல் குறிப்பு பற்றி கேள்வியெழுப்பினார். தர்சானந்த் தனது பேஸ்புக்கில், குலம் (சாதி) குறித்த சொற்களை பயன்படுத்தி, சட்டத்தரணியென்றும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். முதல்வரும் அவரை கூப்பிட்டு விசாரித்தார். எனினும், தர்சானந்த் தனது குறிப்பை எடுக்கவில்லை.

மாநகர சபை அமர்வில், அவர் சாதியை தொடர்புபடுத்தி எழுதியதை கண்டித்தோம். ஆனால், அவர்களிற்கு தேர்தல் வந்தால் புலிகளையும், புலிகளின் தலைவரையும் மதிப்பாக பேசி வாக்கை பெற்றுக்கொள்வார்கள். தேர்தல் முடிந்ததும், இப்படி பேசுவார்கள். அவர் சாதி தொடர்பாக என்னை அப்படி பேசினால், அந்த வட்டத்திற்குள் எமது தலைவர் பிரபாகரனும் அடங்குவார்.

இதனை கண்டிக்க வேண்டிய பொறுப்பிருக்கிறது. அதை செய்தோம். நான் கொஞ்சம் ஆவேசப்பட்டேன். அது தவிர்க்க முடியாமலிருந்தது. நான் சட்டத்தரனியாக ஆகாயத்திலிருந்து குதிக்கவில்லை. எனது தந்தையார் பிடித்த ஒவ்வொரு மீனும்தான் என்னை சட்டத்தரணியாக்கியது. அதை நக்கலாக, இழிவாக, மறைமுகமாக குறிப்பிட்டு எழுதியதை என்னால் ஒருபோதும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எனது தொழிலையும் அழிவுபடுத்தினார். நான் ஹெரோயின் வழக்கு எதிலும் மேல்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தொழில் விடயத்தில் எனக்கு கர்வமுண்டு. எனது தொழிலின் முதல் 11 வருடமும் யாரிடமும் பணம் வாங்கவில்லை. நான் செய்ய அனைத்து வழக்கும் விடுதலைப்புலிகளின் சந்தேகநபர்களிற்காக, இராணுவத்தினால், இயக்கங்களால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பாக வழக்குகள் செய்தேன். யுத்த காலத்தில் என்னைத் தவிர வேறு எந்த சட்டத்தரணியும் இப்படியான வழக்குகளை செய்யவில்லை.

யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து, மக்கள் மத்தியில் சாதிய உணர்வுகளும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் நிலையில், இவற்றை மீள பேசுவது ஏற்க முடியாதது.

தமிழ் தேசியம் பேசுகிறார்கள். தேசியம் என்பது ஒரு வர்க்கம். குழாம். கட்சி, மத, பிரதேச, சாதி வேறுபாடுகள் இருக்க முடியாது. நாம் அனைவரும் தமிழர் என்பதுதான் தேசியம். தேசியம் பேசியபடி, இப்படியான நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுவது ஏற்க முடியாதது.

இவ்வாறான கருத்துக்கள், நடவடிக்கைகளை எதிர்காலததில் மக்கள் அனுமதிக்க கூடாது. இவர்களை நிராகரிக்க வேண்டும். அவர் சார்ந்த கட்சிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

முதல்வரும் எனது இரத்த உறவுதான். தர்சானந்த் எழுதிய பேஸ்புக் பதிவின் கீழ், உஙகள் முதல்வருக்கு இது பொருந்தாதா என கேள்வியெழுப்பியிருந்தனர். எனினும், தர்சானந்த் அதை அகற்றவில்லை“ என்றார்.