கட்சி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒன்றிணையவேண்டும் – வடக்கு ஆளுநர்

w j0
w j0

சபைகளிலே இருக்கின்ற அனைவரும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவருமே இணைந்து மக்களுடைய சேவையினை முடக்காது செயல்படுவதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

மன்னார், அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்ட மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க அலுவலகக் கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘கூட்டுறவே நாட்டுறவு’ என்று சொல்வார்கள். நீங்கள் எல்லோரும் இணைந்தால் தான் ஒரு பிரதேசத்தை, மாவட்டத்தை, ஒரு மாகாணத்தை உயர்த்த முடியும் என்ற சிந்தனை உங்கள் அனைவருடைய மனதிலும் இருக்கின்றது.

ஒரு  மாகாணத்திலே அடிப்படையிலே இயங்கி வருகின்ற அமைப்புக்களில் மூன்று அமைப்புக்களை நாங்கள் கூற முடியும். கூட்டுறவு, கிராம, மாதர் அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றவர்கள் அதிக அளவில் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள்.

மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக மக்களின் சேவைகளை முன்னெடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய எதிர்பார்ப்பும். எக்கருத்துக்களை கொண்டவர்களாகவும் இருக்கலாம், எந்த கட்சியை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம், எந்த மதத்தையும், இனத்தையும் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.

அந்த பிரதேசத்தில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் தமது கிராமங்களின் பிரதிநிதிகளாக அனுப்புகின்றனர்.  எனவே ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .