கொரோனா குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை!

8 Malkam ranjith
8 Malkam ranjith

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாதிருப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளதாகவும், மதத் தலைவர்கள் என்ற அடிப்படையில் இந்த வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது கடமையாகும் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இத்தேபான தம்மாலங்கார தேரர் ஆகியோர் தெரிவித்தனர்.


அத்தோடு சீனப் பிரஜைகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கக் கூடியளவுக்கு பாரதூரமான நிலைமை ஏற்படவில்லை.

அவ்வாறு ஏற்பட்டால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார். 

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று 28 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த பேராயர் மற்றும் தேரர் ஆகியோர் மேலும் கூறியதாவது : 
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்  தெரிவிக்கையில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கையில், மதத் தலைவர்கள் என்ற ரீதியில் கொரோனா வைரஸ் தொடர்பில் எம்மால் முன்னெடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கிறோம்.

எதிர்பாராத வகையில் சீனாவில் உருவாகிய இந்த வைரஸ் ஏனைய சில நாடுகளுக்கும் பரவியிருக்கின்றமை கவலையளிக்கிறது. எனினும் இது தொடர்பிலான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் சிறப்பாக முன்னெடுத்து வருகிறது. 


எனவே மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. அனைவரும் அறிவு பூர்வமாக சிந்தித்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எவ்வித பேதமும் இன்றி இதற்காக தம்மால் இயன்றதைச் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். 

இலங்கைக்கு சுற்றுலா பயணியாக வருகை தந்த பெண்னொருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.

அந்த பெண்ணுடன் வருகை தந்தவர்கள் மற்றும் அவர் தங்கியிருந்த இடம் என்பன தொடர்பில் அரசாங்கம் முழுமையாக அவதானம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம். 

பாடசாலை மாணவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். ஏனைய மதத் தலைவர்களும் இவ்விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

மேலும் சீனாவிலுள்ள இலங்கை மாணவர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.