முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் உண்மை நிலை பற்றி வைத்திய அதிகாரி விளக்கம்!

111 2
111 2

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் உண்மை நிலை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சுகந்தன் விளக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் .

அந்த அறிக்கை வருமாறு.

” முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையானது ஆரம்ப காலங்களில் மாவட்ட வைத்தியசாலையாக இயங்கி வந்துள்ளது. பின்னர் மாவட்டப் பொது வைத்தியசாலை ஆனது. மாஞ்சோலையில் நிர்மாணிக்கப்பட்டு இயங்கிவருகின்றது.

பூகோள அமைவிடம், முல்லைத்தீவின் பிரதான பேரூந்துத் தரிப்பிடத்திற்கு அருகில் உள்ளமை, ஆரம்ப காலத்தில் இருந்தே இது ஒரு பழக்கப்பட்ட வைத்தியசாலையாக இருக்கின்ற காரணங்களினால் இவ் வைத்தியசாலைக்குத் தினமும் சராசரி 150 நோயாளர்கள், வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தருகின்றனர்.

இவ் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, பொது மருத்துவச் சிகிச்சை, அடிப்படை ஆய்வுகூட சேவைகள், மற்றும் தொற்றா நோய்க்கான ஆரோக்கிய வாழ்க்கை முறை நிலையத்தின் நடவடிக்கைகள் போன்ற பல சேவைகள் இடம்பெறுகின்றன.

இங்கு நான்கு தாதிய உத்தியோகத்தர்கள், மருந்தாளர் ஒருவர், மருந்துக் கலவையாளர் ஒருவர், ஆய்வுகூடப் பரிசோதகர் ஒருவர் மற்றும் பதினொரு சுகாதாரப் பணியாளர்கள் என மனிதவளம் காணப்படுகின்றது.

இவ்வைத்தியசாலையானது ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தினுள்உள்ளடக்கப்பட்டுள்ளதால் பல அபிவிருத்திகள் அடுத்துவரும் மூன்று வருடங்களிலும் ஏற்படுத்தப்பட உள்ளது.

இவ்வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடமாக நிலையான வைத்தியர் இல்லாத நிலமையே காணப்படுகின்றது. இவ்வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட இரண்டு வைத்தியர்களில் ஒருவர் தனது வேலையைத் துறந்து வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.

மற்றவர் தனது மகப்பேற்று விடுமுறைகளின் பின்னர் சம்பளம் நிறுத்தப்பட்ட நிலையிலும் கடமைக்குத் திரும்பாமை போன்ற காரணங்களால் தற்காலிகமாக வேறு வைத்தியசாலை வைத்தியர்களை இங்கு கடமைக்கு அமர்த்துவதும் பின்னர் அவ்வைத்தியசாலைகளில் பிரச்சனைகள் வரும்போது வேறு வைத்தியசாலைகளில் இருந்து வைத்தியர்களைக் கடமைக்கு அமர்த்துவது எனத் தற்காலிக நிர்வாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்கான நிரந்தர வைத்தியர்களின் தேவைகள் சுகாதாரத் திணைக்களத்தின் பல்வேறுமட்ட உயர் அதிகாரிகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கௌரவ ஆளுநர் அவர்களின் கூட்டங்கள், ஊடகங்கள் போன்ற பல இடங்களிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர வைத்தியசாலையில் பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் பல சந்திப்புகளை நடத்தி அவர்களுக்கூடாகவும் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது.

வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தைத் தாபித்தல் மற்றும் மாதிரித் திட்டத்தைத் தயாரித்து அபிவிருத்திகளை மேற்கொள்ளல் போன்ற பல செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது இவ்வைத்தியசாலையில் எமது மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு பிரிவுகளிலும் உள்ள வைத்தியர்கள் சுழற்சி முறையில் தமது கடமைகளுக்கு மேலதிகமாக காலை 8 மணிமுதல் மதியம் இரண்டு மணிவரை கடமையாற்றி வருகின்றனர்.

இந்த ஒழுங்குபடுத்தல்களின் போது சில நாட்களில் வைத்தியர் இல்லாத நிலையும் ஏற்படுவதுண்டு. உள்ளகப் பயிற்சிகளை நிறைவு செய்த வைத்தியர்களை வெகு விரைவில் நியமிக்க உள்ளதாக எமது உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருடாந்த இடமாற்றத்தின் மூலமாகவும் வைத்தியர்கள் இங்கு வருகைதர வேண்டும் என்பதே எமது விருப்பம். மக்கள் அனைவரும் அரசியல் மற்றும் பிரதேச வேற்றுமைகளை மறந்து யாருடைய மனங்களையும் புண்படுத்தாது தேவையான செயற்பாடுகளில் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

இதை விடுத்து ஊடகங்களின் ஊடாக விடுக்கப்பட்டுள்ள பாரிய போராட்டங்களுக்கான மக்களுக்கான அழைப்பானது நல்ல ஒரு முயற்சியாகப் பலராலும் பார்க்கப்படவில்லை என்பதை இங்கு மக்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த பத்து வருடங்களாகவே வைத்தியர்களுக்கான பிரச்சினை நிலவிவருகின்றது. மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்களும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பல வைத்தியர்களும் இப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் மிகச் சிரமங்களுடன் தங்கள் கடமைகளைச் செய்து வருகின்றனர்.

மாவட்டத்தில் படித்து மாவட்டத்தில் இருந்து தெரிவாகி மருத்துவர்களாகப் பல்வேறு இடங்களிலும் இருக்கும் வைத்தியர்கள் வருடாந்த இடமாற்றத்தின் மூலம் இங்கு வருகைதந்து சில வருடங்களுக்கேனும் இங்கே கடமையாற்ற முன்வரவேண்டும்.

இதை மக்களும் மருத்துவ ஒன்றியங்களும் ஊக்கப்படுத்த வேண்டும். ஊடகங்களும் சமூகப் பொறுப்புடன் இத்தகைய செயற்பாடுகளுக்கு ஆதரவு கொடுப்பதுடன் மக்களுக்கான செய்திகளைத் தார்மீகக் கடமையாகத் தொடர்ந்தும் கொடுப்பதற்காக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.