இ.போ.சபையின் புதிய முகாமையாளரின் நியமனத்திற்கு எதிராக கவன ஈர்ப்பு!

1 fdf
1 fdf

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் புதிய முகாமையாளரின் நியமனத்திற்கு எதிராக இன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச்சபை முகாமையாளர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து முடிவுக்கு வந்தது.

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபைக்கு தேசிய போக்குவரத்து சபையினால் நியமிக்கப்பட்ட முகாமையாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்கவிருந்த நிலையில் அந்த நியமனத்திற்கு எதிராக சாலையின் வாயில் கதவுகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முகாமையாளர் முன்னர் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபையில் கடமையாற்றியதாகவும் அதன்போது ஊழல்கள் இடம்பெற்றுள்ளதுடன் ஊழியர்களுடன் முறையற்ற வகையில் நடந்துகொள்வதாகவும் அதன் காரணமாகவே அவரை கடந்த காலத்தில் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து இடமாற்றம் செய்ததாகவும் ஆனால் அவரை மீண்டும் சாபைக்கு நியமிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதன்போது மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபைக்கு வருகைதந்த ஆர்.எம்.டி.விஜித தர்மசேன வருகைதந்து ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

குறித்த முகாமையாளரை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் அவரை அனுமதித்தால் சபையின் செயற்பாடுகள் முடங்கும் எனவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதன்போது மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபையினை தான் தற்காலிகமாக பொறுப்பெடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பின்னர் புதிய முகாமையாளர் ஒருவர் நியமிக்க நடவடிக்கையெடுப்பதாகவும் கிழக்கு பிராந்திய முகாமையாளர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஊழியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து போராட்டத்தினை கைவிட்டனர்.