பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக பெரும்பான்மை இனத்தவர்

1 ery
1 ery

பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக பெரும்பான்மை இனத்தவர் ஒருவரை நியமித்திருப்பது பனைத்தொழிலை நசிவுக்குள்ளாக்கும் பேரினவாதச் செயற்பாடாகும் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கடும் கண்டனத்தைத் தெரிவித்தள்ளார்.

பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவராக அரசாங்கத்தால் தென்னிலங்கையைச் சேர்ந்த கிரிசாந்தா பத்திராஜ என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், இலங்கையில் தமிழர் தாயகத்தின் தான்தோன்றித் தாவரம் பனை என்பதுடன் இப்பெருமரம் தமிழ் மக்களின் பண்பாடு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் உயிரோட்டமான பங்களிப்பை நல்கித் தமிழ் தேசியத்தின் மிடுக்கான அடையாளமாகத் திகழ்கின்றது.

தமிழின் முகவரியாக விளங்குகின்ற இப்பெருவளத்தின் அபிவிருத்திக்கென இதனுடன் எவ்விதத்திலேனும் தொடர்புற்றிராத தென்னிலங்கையின் பேரும்பான்மையினத்தவர் ஒருவரை புதிய அரசாங்கம் தலைவராக நியமனம் செய்திருக்கிறது.

அங்கு தொட்டு, இங்கு தொட்டுக் கடைசியில் உயிர்மடியில் கைவைப்பது போன்ற அரசாங்கத்தின் இச்செயற்பாடு பேரினவாதத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடேயன்றி வேறொன்று அல்ல.

தமிழர்களின் வாழ்வியலில் பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்டிருக்கும் பனைமரத்தில் இருந்து பொருளாதார ரீதியாக உச்சப் பயன்களைப் பெறும் நோக்குடனேயே பனை அபிவிருத்திச்சபை உருவாக்கப்பட்டது. ஆனால், இதன் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஒரு சிலரே பனையின் சமூக, பொருளாதாரம் பற்றிய பட்டறிவும் புலமைசார் அறிவும் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள்.

பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியற் சிபார்சு என்ற தகுதி நிலையை மட்டுமே கொண்டிருந்தார்கள்.

ஆளுங்கட்சியில் அல்லது அதற்கு முண்டுகொடுக்கும் தமிழ் கட்சிகளில் இருந்து தேர்தலில் தோற்றுப்போன பலருக்குப் பரிகாரமாகத் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய அரசியல் நியமனங்களால் பனைசார் உற்பத்தித் தொழில்கள் பின்னடைவைச் சந்தித்தது என்பதே கடந்தகால வரலாறாக உள்ளது.

தற்போது பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக, பாட்டனார் யாழ்ப்பாணத்தில் வெதுப்பகம் ஒன்றை வைத்திருந்தார் என்பதைத் தவிர பனையின் சமூக வாழ்வியலுடனோ, பனை அறிவியலுடனோ எவ்விதத் தொடர்பும் இல்லாத தென்னிலங்கையைச் சேர்ந்த கிரசாந்தா பத்திராஜ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சரிவை நோக்கித் தள்ளப்பட்டுள்ள பனைத் தொழிலை மேலும் நசிவுக்குள்ளாக்கும் நியமனமாகவே அமையும் என்பது திண்ணம்.

தமிழ் தேசியம் என்பது நாடாளுமன்றத்துக்குள்ளோ மாகாண சபைகளுக்குள்ளோ இல்லை. இவற்றுக்கு வெளியே தமிழ் மக்களின் வாழ்வியலுக்குள்ளேயே இது அடங்கியுள்ளது.

அந்தவகையில், தமிழ் தேசியத்தின் அடையாளமாக விளங்கும் பனை மரத்தைப் பெருக்கி, பனைசார் தொழில்களை மேம்படுத்த வேண்டுமெனில் அரசியல் நியமனம் அல்லாத பனைசார் சமூகவியலையும் அறிவியலையும் தகைமைகளாகக் கொண்ட பொருத்தமான ஒருவரே பனை அபிவிருத்திச் சபையின் தலைவராதல் வேண்டும்.

இதற்குரிய அழுத்தத்தை அரசாங்கத்துக்குக் கொடுப்பதற்கு தமிழ் தேசியம் பேசும் எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகள் முன்வரவேண்டும். ‘பனை வீழின் தமிழர் தம் வாழ்வும் வீழும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.