விரிவுரையாளர் போதநாயகியின் மரணம்- இன்றுடன் ஓராண்டு

pothanayagi
pothanayagi

கடந்தவருடம் செப்ரெம்பர் 20 ஆம் திகதி. கிழக்கு மாகாணத்தை மட்டுமல்ல முழு இலங்கையையும் பதற செய்த சம்பவம் இடம்பெற்று இன்று ஓராண்டு காலம் மறைந்து விட்டது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய வவுனியா – ஆசிக்குளம், கற்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடராசா போதநாயகி என்ற பெண் விரிவுரையாளரின் சடலம் 20.09.2018 அன்று திருகோணமலை கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த விரிவுரையாளர் கர்ப்பிணி என்பதுடன் அவரின் மரணம் தொடர்பில் பல சந்தேகங்கள் வெளியிடப்பட்ட நிலையில் இன்றும் அதற்கான பதில் கிடைக்கவில்லை.

வீட்டுக்கு வருகின்றேன் என தொலைபேசியில் தகவல் தெரிவித்திருந்த விரிவுரையாளர் இரவாகியும் வீட்டுக்கு வராமையினால் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவரின் தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்த நிலையில், திருகோணமலையின் சங்கமித்தை கடற்கரையில் பெண்ணொருவரின் பாதணிகளும் கைப்பையும் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

குறித்த இடத்திற்கு விரைந்த சென்ற பொலிஸார் கைப்பையை கைப்பற்றி சோதனையிட்டபோது அது திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளர் போதநாயகிக்கு உரியது என கண்டறிந்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் வளாகத்துடன் தொடர்புகொண்ட போது அவர் வளாகத்தில் இருந்து சென்ற விடயம் தெரியவரவே பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது பெண்ணொருவரின் சடலம் கடற்கரையோரமாக இருப்பதை அறிந்தபோதுதான் அந்த சடலம் விரிவுரையாளருடையது கண்டறியப்பட்டது.

வவுனியா ஆசிகுளம் கற்குளத்தில் வசிக்கும் போதநாயகியின் பெற்றோர், குறித்த தகவலை போதநாயகியின் கணவருக்கும் வழங்கியதோடு திருகோணமலைக்கு விரைந்தனர். அங்கு போதநாயகியின் சடலத்தினை கணவர் மற்றும் குடும்பத்தினர் அடையாளம் காட்டியதை அடுத்து பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதேவேளை போதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தததோடு கணவன் செந்தூரனால் பல கொடுமைகளுக்கு உட்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

மனைவியின் மரணம் தொடர்பாக கேள்வியுற்று அதிர்ச்சி அடையாமல் சதாரணமாக திருகோணமலைக்கு வந்தவர் கணவர் செந்தூரன் சடலத்தை தனது வீட்டில் வைக்க வேண்டும் என முரண்பட்டு சென்றவர் தான் கடைசியில் மனைவியின் இறுதி கிரியைக்கு கூட செல்லவில்லை.

இந் நிலையில் இச்சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தபோது போதநாயகியின் சகோதரரின் வாக்குமூலத்தில் சந்தேகமும் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில், போதநாயகி நடராஜாவின், மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து பலரும் ஆர்ப்பாட்டங்களினை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்திற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை என்பதோடு மர்மம் நிறைந்ததாகவே உள்ளதென்பது வேதனைக்குரிய விடயம்.