நாம் வெளியேற்றிய குப்பைகளை கூட்டி பொறுக்கும் ரவி – சாடும் மனோ

1 ed 1
1 ed 1

தமிழ் பிரதிநிதித்துவத்தை ஒழித்தே தீருவேன் என்று அடம்பிடிக்கும் கரு ஜயசூர்யாவின் நிலைப்பாடு பற்றி முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கருத்து வெளியிட்டுள்ளார் .
அந்தவகையில் அவர் இப்படி கூறுகிறார் ..

ஐதேகட்சியின் தலைமை பதவியை விட்டுத்தர ரணில் மறுக்க, அதை சஜித் அணி கோர, பெரும் குழப்பம் நிலவியது.


இந்த உட்கட்சி குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பலமான எதிரணி கூட்டணியை அமைக்கும் முகமாக, “ஐதேக தலைவர் ரணில், கூட்டணி தலைவர் சஜித்” என்றும், “கூட்டணியிலேயே தேர்தலை சந்திப்பது” என்றும் முடிவானது.


இந்த தீர்வை கொண்டு வர, பங்காளி கட்சிகள் பெரும் பங்காற்றின. இது ரவி கருணாநாயக்கவுக்கு பிடிக்கவில்லை. இவருக்கு சஜித் என்றாலே அலர்ஜி.


கருணாநாயக்கவின் தீர்வு திட்டம், “ரணில் ஐதேக தலைவர். கரு கூட்டணி தலைவர், கருவே பிரதமர் வேட்பாளர். சஜித் எதிர்க்கட்சி தலைவர்”, என்பதாகும்.


இவரது திட்டம் நிறைவேறவில்லை என்பதால், இவர் என் மீது கடும் கோபம் கொண்டுள்ளாராம். கொழும்பில், தமிழ் வாக்குகளை தான் மட்டுமே பெற்று, என்னை இங்கே தோற்கடித்து, தமிழ் பிரதிநிதித்துவத்தை ஒழித்தே தீருவேன் என்கிறாராம். இதற்காக எமது கட்சியில் இருந்து நாம் வெளியேற்றிய குப்பைகளை கூட்டி பொறுக்கிக்கொண்டு திரிகிறாராம்.


என் மீது அக்கறை கொண்டு, என்னிடம் இதுபற்றி நல்லெண்ணத்தில் நண்பர்கள் சிலர் வந்து இன்று சொன்னார்கள்.


“என்னை, என் கட்சியும், கூட்டணியும், மக்களும், பாதுகாப்பார்கள். முதலில் தான் தேர்தலில் வெல்வது எப்படி, கொழும்பில் யூஎன்பி சிங்கள வாக்குகளை பெறுவது எப்படி, என யோசித்து தான் வெற்றி பெறுவதற்கான வழியை தேடும்படி கருணாநாயக்கவிடம் சொல்லுங்கள்.

மற்றபடி கருணாநாயக்க போன்றோரை கவனத்தில் எடுக்க எனக்கு நேரமில்லை” என்று வந்தவர்களுக்கு நல்லபடியாக பதில் சொன்னேன்.


இதையே சில நிமிடங்களுக்கு முன், ரவி கருணாநாயக்க என்ற இந்த முன்னாள் நிதி அமைச்சருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து நேரடியாக சிங்கள மொழியிலும் கூறினேன் என முன்னாள் அமைச்ச்ர மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.