சர்வதேசத்துடன் முட்டிமோதும் கோட்டாபய அரசு! ஏற்படப் போகும் விபரீதம்

GOTABAYAjpg
GOTABAYAjpg

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளைத் திரட்டும் நோக்கத்துடன் ஐ.நாவுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் ராஜபக்ச அரசு வலிந்து முட்டிமோதுகின்றது. எனவே, தேர்தலில் ராஜபக்ச அணியினருக்கு நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளினாலேயே உரிய பதிலடியை வழங்க வேண்டும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியமையாலேயே 2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை சர்வதேச சமூகத்துடன் எந்தவிதப் பகைமையும் இன்றி இலங்கை இருந்தது. ஆனால், இவ்வருடம் மீண்டும் ஆட்சிப்பீடமேறிய ராஜபக்ச அரசு ஐ.நா. தீர்மானங்களுக்கான இணை அனுசரணையை விலக்கிக்கொண்டமையால் சர்வதேசத்தை இலங்கைக்கு வலிந்து அழைக்கின்றது.

இதனால் நாட்டில் ஏற்படப்போகின்ற பாரதூரமான விளைவுகளுக்கு நாம் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல. ராஜபக்ச குடும்பமே இதற்கு முழுப்பொறுப்பு.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐ.நா. தீர்மானங்களுக்கு நாம் (நல்லாட்சி) வழங்கிய இணை அனுசரணை அடுத்த வருடம் நிறைவடையும் வரைக்கும் அமுலில் இருக்கும். அதில் மாற்றம் இல்லை. எனினும், இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் ராஜபக்ச அரசு அவசரப்பட்டு தீர்மானங்களுக்கான இணை அனுசரணையை விலக்கிக்கொள்கின்றோம் என்று தெரிவித்தமையால் அடுத்த வருட ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கடுமையான தீர்மானத்தை சர்வதேச நாடுகள் கொண்டுவரக்கூடும். இதனால் நாடுதான் பாரிய விபரீதங்களைச் சந்திக்கப்போகின்றது.

எனவே, ஆட்சியிலிருக்கும் ராஜபக்ச அரசை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலேயே மண்கவ்வச் செய்ய வேண்டும். நாட்டின் நலன் கருதி இந்தக் கடமையை அனைத்து மக்களும் தவறாது செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.