புர்கா, நிகாப் அணிவதில் சிக்கல்

purka
purka

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அவசர கால சட்டம் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அமுல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முகத்தை முழுமையாக மறைத்து அணியும் ஆடைகள் மற்றும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைகவசங்களை அணிவற்கும் பாதுகாப்பு பிரிவினர் தடை விதித்திருந்தனர்.

நாட்டில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட பெண்கள் அணியும் முகத்திரைக்கான தடையும் நீங்கியுள்ளது என பொலிஸ் திணைக்களம் தெளிவுபடுத்தியிருந்தாலும் முஸ்லிம் பெண்கள் தற்போதைய சூழ்நிலையில் பொது இடங்களில் முகத்திரை அணிவதால் ஏற்படக் கூடிய அசாதாரண நிலைமைகளை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் இது விடயத்தில் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்கனவே முஸ்லிம் பெண்களின் முகத்திரை தொடர்பில் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களின் நிலைப்பாட்டிலே தொடர்ந்தும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப், புர்கா மற்றும் முகத்திரைக்கான தடை நீக்கம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரால் எவ்வித தெளிவுகளும் முன்னர் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் இது தொடர்பில் தெளிவுகளை வழங்குமாறு முஸ்லிம் சமய, விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பொலிஸ்மா அதிபருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்த நிலையில், அமைச்சர் ஹலீமின் கடிதத்துக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுள் ஒருவரான அஜித் ரோஹன தெளிவுபடுத்தியுள்ளார்.

நிகாப், புர்கா மற்றும் முகத்திரைக்கான தடை அவசர காலச் சட்டத்தின் கீழேயே அமுலுக்கு வந்தது. தற்போது அவசரகாலச் சட்டம் அமுலில் இல்லை என்பதால் அத்தடையும் அமுலில் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதும் அச்சட்டத்தின் கீழ் அமுலுக்கு வந்த முஸ்லிம் பெண்களின் முகத்திரைக்கான தடையும் நீங்கியுள்ளது என உலமா சபையின் சட்டத்தரணிகள் தெரிவித்திருக்கிறார்கள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகார செயலாளர் மௌலவி அர்கம் நூராமித் தெரிவித்தார்.