பொதுபலசேனா காவியுடையில் வெறியாட்டம்- அமைச்சர் ராஜித காட்டம்

rajitha 1
rajitha 1

மறைந்த மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலை விகாரைக்கு முன்னதாக உள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாது செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள குளத்தில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் நேற்று தகனம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன


“இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் காவியுடையில் எவரும் வெறியாட்டம் போடக்கூடாது. நீதிமன்றத்தை அவமதித்து சிறைக்குள் இருந்தவர்கள் மீண்டும் வெளியில் வந்து சண்டித்தனம் காட்டுகின்றார்கள். இது நாட்டுக்குத்தான் அவமானம்” என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாடு அனைத்து இனத்தவர்களுக்கும் – சகல மதத்தவர்களுக்கும் சொந்தமான நாடு. இதில் நான் பெரிது – நீ சிறிது என்ற பாகுபாடு வேண்டாம். நாட்டின் நீதித்துறைக்கு அனைவரும் தலைவணங்கியே ஆக வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடியில் பிக்குகள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது. இது இறந்த விகாராதிபதியை அவமதிக்கும் செயலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.