கொழும்பில் போட்டியா ? இன்று முடிவெடுக்கிறது தமிழரசுக் கட்சி

Ilankai Tamil Arasu Kadchi
Ilankai Tamil Arasu Kadchi

கொழும்பு – பம்பலப்பிட்டியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் கூட்டத்தில், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் எனப் பெரும்பாலானவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனினும், இது தொடர்பில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் நோக்குடன் கட்சியின் கொழும்புக் கிளையின் கூட்டம் அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் பம்பலப்பிட்டியில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடுவது தொடர்பில் சாதக, பாதக நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டன.

தமிழரசுக் கட்சி கொழும்பு மாவட்டத்தில் இம்முறை கட்டாயம் போட்டியிட வேண்டும் எனக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 80 வீதமானோர் வலியுறுத்தினர்.

எனினும், இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அவரது கொழும்பு இல்லத்தில் நடைபெறவுள்ள தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக் குழுக் கூட்டத்திலேயே இறுதி முடிவெடுக்கப்படும் என்று நேற்றைய கூட்டத்தின் நிறைவில் தெரிவிக்கப்பட்டது.

” வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக் குழுக் கூட்டத்தில் கட்சியின் சார்பில் வடக்கு, கிழக்கிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் இறுதிசெய்யப்படவுள்ளன. இதன்போது கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்” என்று தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் கே.வி.தவராசா தெரிவித்தார்.