தலைநகரில் தமிழரசு களமிறங்குவது ‘யானை’க் கூட்டணிக்குத்தான் பாதகம் – பிரதமர்

mahinda
mahinda

“நாடாளுமன்றத் தேர்தலில் தலைநகர் கொழும்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி போட்டியிட்டால் அது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்குத்தான் பாதகமாக அமையும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணிக்கு எந்த வழியிலும் சவால் வராது; எந்த வகையிலும் பாதிப்பும் வராது.” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அவரது கொழும்பு இல்லத்தில் இன்று தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது. இதன்போது தமிழரசுக் கட்சியின் சார்பில் வடக்கு, கிழக்கிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் இறுதிசெய்யப்படவுள்ளன. அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடுவது தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எந்தக் கட்சியும் எந்த மாவட்டத்திலும் போட்டியிடலாம். எனவே, தமிழரசுக் கட்சியும் கொழும்பு மாவட்டத்தில் சுதந்திரமாகப் போட்டியிடலாம்.

கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்கும் தமிழ் மக்கள் எமது கட்சிக்கே தொடர்ந்து வாக்களிப்பார்கள். அதில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கும் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தமிழரசுக் கட்சி போட்டியிட்டால் அந்தக் கட்சிக்கே வாக்களிப்பார்கள்.  இதனால் பாதிக்கப்படுவது ஐக்கிய தேசியக் கட்சியேயன்றி நாம் அல்ல” – என்றார்.