ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டியே தீரவேண்டும் – சம்பிக

champika ranawaka
champika ranawaka

“அரசியல் பழிவாங்கலிலிருந்து மீள்வதற்கும், ராஜபக்ச தரப்பினரின் குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் அணியாகவே ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அமைந்துள்ளது. எனவே, பொதுத்தேர்தலின்போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.” என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதன் காரணமாக எமக்கு வாக்களித்த அனைவரும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக நேரிட்டுள்ளது. எதிர்காலத்தில் எவ்வாறு இந்நிலையிலிருந்து மீள்வது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியது அவசியமானதாகும்.

அதிலிருந்து மீள்வதாயின் மாற்றம் ஏற்பட வேண்டும். அத்தகைய புதிய மாற்றத்துக்காகவே ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியுள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்குடன் இதை உருவாக்கவில்லை. புதிய தலைமைத்துவத்தில் புதிய பாதையில் பயணிப்பதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்தக் கூட்டணியாகும்.

அடிப்படைவாத நடவடிக்கைகள் நாட்டினுள் வலுவடைந்துள்ளதாகவும் அதனை முறியடிப்பதாகவும் கூறிக்கொண்டு ராஜபக்சவினர் ஆட்சிக்கு வந்தனர். ஆயினும், அதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக நாம் அரச ஊழியர்களுக்கு வழங்கிய சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு என்பனவற்றை இந்த அரசு இரத்துச் செய்துள்ளது.

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்ததை அடுத்து எரிபொருள் விலையைக் குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். நட்டத்தில் இயங்கிய மின்சார சபையை இலாப நிலைக்கு உயர்த்தினோம். பல்வேறு சலுகைளை நாட்டு மக்களுக்கு வழங்கியிருந்தோம்.

ஆனால், இந்த அரசு செல்வந்தர்களுக்கும், கசினோ சூதாட்டகார்களுக்குமான வரிச்சலுகையையே வழங்கியுள்ளது” – என்றார்.