இன முறுகளைத் தீர்க்க அனைத்துக் கட்சிக் கூட்டம்- முன்னாள் முதலமைச்சர் கோரிக்கை

varadaraja perumal
varadaraja perumal

“முல்லைத்தீவில் தீவிரமடைந்துள்ள இன முறுகளைத் தீர்க்க ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக அனைத்துக் கடசிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” என இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் சட்டம் ஒழுங்கு அமுலில் உள்ளதா? நீதிக்கு எவ்வளவு மதிப்பு உள்ளது என்பதை முல்லைத்தீவு நீராவியடி சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவினை மீறி நடைபெற்ற சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டிய பொலிஸார் அதனை மீறி வேடிக்கை பார்த்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்தி,சட்ட ஒழுங்கை பேணத் தவறிய பொலிஸார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைத்தீவு சம்பவம் இன நல்லிணக்கத்தை பாதித்துள்ளது. நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படும் என்று இருந்த எதிர்பார்ப்பு வீணாகிப் போய் விட்டது. எனவே இது தொடர அனுமதிக்காது உடனடியாக அனைத்துக் கட்சிக் கூடடத்தை ஜனாதிபதியும், பிரதமரும் கூட்ட வேண்டும். இதை செய்ய பாராளுமன்றத்தில் உள்ள தமிழ் தரப்புக்கள் கோர வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பில் பல தரப்புகளும் ஒவ்வொரு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸவும் முல்லையில் பௌத்த பிக்குக்களை மதிக்காமல் நடந்து கொண்டமையினாலேயே அங்கு பிரச்சனைகள் உருவாகியுள்ளன என கூறியுள்ளார். நான் நினைக்கின்றேன் கோத்தபாஜவுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற தகவல் கிடைக்கவில்லை அல்லது முழுமையான தகவல் அவரை சென்றடையவில்லை அதனாலேயே அவர் அவ்வாறான கருத்தை வெளியிட்டிருக்கலாம். எனினும் நாம் யார் தவறாக நடந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

சம்பவ இடத்தில் நின்ற ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுத்தாலும் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத பொலிஸார் மீதே முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது ஆரோக்கியமானது அல்ல. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றியடைந்தாலும் வான் ஒன்றை வாங்குவது என்றால் கூட பிரதமரின் அனுமதியை பெறவேண்டிய தேவை உள்ளது. எனவே சிலர் கூறுவது போல அவர் வெள்ளை வான் ஒன்றை வாங்க வேண்டுமானால் கூட அரசில் உள்ள பிரதமரின் அனுமதியை பெற்றே வாங்க முடியும். ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் இனிவரும் காலங்களில் அவ்வாறே இருக்கும். எனவே மக்கள் கோத்தாவை பார்த்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.என்றார்.