இலங்கையில் பௌத்தத்துக்கு முன்னுரிமை; சிறுபான்மை கட்சிகள் இணங்கியதன் விளைவு

daglas 0
daglas 0

இலங்கையில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க சிறுபான்மை கட்சிகள் இணங்கியதன் விளைவே முல்லைத்தீவு நீராவியடி சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க நாம் இணங்குகின்றோம் என சிறுபான்மை கட்சிகள் தெரிவித்திருந்தன. ஆனால் எனது கட்சி மட்டும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சிறுபான்மை கட்சிகள் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கியதால் தான் இவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பினர் முட்டுக்கொடுத்து வரும் அரசாங்கத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக அந்த ஆலய சூழல் காணி தொல்பொருள் திணைக்களத்திற்குரியது என்று கூறப்படுகின்றது. அந்த தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்தான அமைச்சினை ஐக்கிய தேசியக் கடசியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறப்படுகின்ற சஜித் பிரேமதாஸவே கொண்டுள்ளார். அவரை தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பினர் பல தடவைகள் சந்தித்துள்ளனர். அப்போது ஏன் இந்த பிரச்சனைகளைக் கூறி தீர்வு காணமுடியவில்லை. இவர்கள் பணப்பெட்டி அரசியல் செய்து வருகின்றனர். இதனால் எதனையும் பேசமுடியாதவர்களாக உள்ளனர்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி வருகின்றோம். நாம் அவரை நம்பி வாக்களியுங்கள் என மக்களை கோரவில்லை. எம்மை நம்பி வாக்களியுங்கள், நாம் செல்வதை செய்து காட்டுவோம். கடந்த காலங்களில் நாம் செய்த அபிவிருத்திகளை மக்கள் அறிவார்கள். நாம் கோத்தபாயாவுக்கு ஆதரவு வழங்கியதை சவப்பெட்டி அரசியல் கட்சியினரும், பணப்பெட்டி அரசியல் கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். போரை முன்னின்று வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் தலைமைகள் இப்போது எம்மை விமர்சிக்கின்றனர்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட தமிழ் தலைமைகள் ஆதரவு வழங்கியுள்ளனர். அவ்வாறான நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாயாவுக்கு ஆதரவு வழங்குவதில் எவ்வாறான தவறுகள் உள்ளன என்று விளங்கவில்லை. என்மீதும் எனது கட்சியின் மீதும் சிலர் திடடமிட்ட வகையில் சேறு பூசினார்கள். ஆனால் இப்போது வரலாறுகள் எம்மை அதில் இருந்து விடுவித்து வருகின்றது.

அண்மையில் கூட மக்களின் வாழ்வாதாரத்தை குழப்பி, உசுப்பேத்தி கடையடைப்பு செய்தனர். அத்துடன் எழுக தமிழ் பேரணி ஒன்றையும் நடத்தினார்கள். ஆனால் மக்கள் அவர்களின் ஏமாற்று நாடகங்களை புரிந்து விட்டார்கள். அதனால்தான் அதற்கு மக்கள் எதிர்பார்த்தளவு செல்லவில்லை. இந்த பேரணி முழுக்க முழுக்க சுயலாப அரசியலுக்காகவே நடத்தப்பட்டது. எனினும் மக்கள் மத்தியில் அது அடிபட்டு போய்விட்டது என்று தெரிவித்தார்.