இனவாதிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- மட்டு மாநகரசபை முதல்வர் தெரிவிப்பு

batti 1
batti 1

சட்டத்தரணிகள் மீதும், பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடாத்தி தமது அடாவடித்தனத்தினைக் காட்டும் இந்த இனவாதிகளுக்கு எதிராக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திலேயே நீதிமன்றத் தீர்ப்பினையும் மீறி பௌத்த துறவியை அடக்கம் செய்தமையின் ஊடாக கௌரவமான நீதி மன்றினையும் மீறி பௌத்த மேலாதிக்கம் செயற்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது எனவும்

இந்த நாட்டின் நிர்வாகத்துறையாலும் சட்டத்துறையாலும் தமிழ் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டு வந்த போதெல்லாம் நீதித்துறையே சட்டத்தின் பால்நின்று தமிழ் மக்களைக் காத்து நின்றது.

நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டிட்காக சிறைவாசம் அனுபவித்த ஞானசார தேரரை இந்த நாட்டின் ஜனாதிபதி தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து மேலும் மேலும் நீதிமன்றங்களை அவமதிக்க ஊக்குவித்துள்ளமையின் ஊடாக சிறுபான்மை சமூகத்தினரை அடக்கி ஆழ நினைக்கும் பேரினவாதிகளின் மறைமுக நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது.

ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னும் பௌத்த பேரினவாதிகளின் மனோநிலையில் மாற்றம் ஏற்படவில்லை.

இதையறியாது சில தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இருப்பினைக் கருத்தில் கொண்டு பேரினவாதிகளுடன் சேர்ந்து செயற்பட்டு வருவதும் தமிழர்களின் பாரம்பரிய நிலங்களையும், கலாசாரங்களையும் சிதைக்க முற்படும் போதெல்லாம் அவர்களுக்கு வக்காளத்து வாங்குவதும் வேதனை அளிக்கின்றது.

கடந்த காலங்களில் இலங்கையின் சட்டத்துறையான பாராளுமன்றம் மற்றும் நிர்வாகத் துறையான ஜனாதிபதி ஆகியோரால் தமிழ் மக்களுக்கு பல அநீதிகள் இழைக்கப்பட்ட போதெல்லாம் பெரும்பாலும் தமக்கான நீதியினை நீதித்துறையின் உடாகவே பெற்றுக் கொண்டனர்.

இருந்தும் நீதிமன்றத்தின் தீர்ப்பினை கூட கட்டுப்படுத்தும் அளவிற்கு இந்த நாட்டில் பௌத்த மேலாதிக்கம் ஓங்கி நிற்கின்றமையை கணமுடிகின்றது. சட்டத்தரணிகள் மீதும், பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடாத்தி தமது அடாவடித்தனத்தினைக் காட்டும் இந்த இனவாதிகளுக்கு எதிராக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல இவர்களுக்குத் துணை போகும் போலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டினை சட்டம் தான் ஆட்சி செய்ய வேண்டும்.

அதே போல் சட்டத்தின் முன் யாவரும் சமமாக மதிக்கப்படவும் வேண்டும். இந்துக்களுக்கு ஓர் நீதி பௌத்தர்களுக்கு ஓர் நீதி என்று இருப்பதனை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.