வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கான விழிப்புணர்வு வாரம்

fd
fd

அடுத்து வரும் இரண்டு வாரங்களும் வடக்கு மாகாணத்தில் கொரோன தொற்றுக்கான விழிப்புணர்வு வாரமாக அமையும் என மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

கொரோனா வைரஸ் தொற்று குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்படும் பட்சத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள் 14 நாட்களுக்கு வெளியே செல்ல முடியாதவாறு இருக்க வேண்டும். அக் குடும்பத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவர் இருந்தால் அவருக்கான மருத்துவ சான்றிதழை அப்பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்திய பணிப்பாளர் தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதற்கு அரசாங்கம் பல்வேறு முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.மருத்துவ மனைகளுக்கு நோயாளர்களை பார்வையிட இயன்ற வரை பலர் செல்வதை தவிர்க்க வேண்டும்.

பொது இடங்கள் மற்றும் அரச அலுவலகங்களில் கை கழுவுவுதற்கு ஏற்பாடுகள் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.தனியார் மற்றும் அரச பேருந்துகளை சேவை முடிந்த பின்னர் இரவு வேளை தொற்று நீக்கி கழுவுவதற்குஅறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகள் தனியார் விருந்தினர் விடுதியில் தங்கினாலும் அவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். இதற்கு விடுதி உரிமையாளர்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.அல்லது இது தொடர்பான விளைவுகளுக்கு விடுதி உரிமையாளர் பதில் கூற வேண்டும் என்றார்.

கொரோனா தொற்று நோய் பொது மக்களுக்கான அறிவுறுத்தல்கள்

  1. கடல் கடந்த பிரயாணங்களை மேற்கொள்பவர்கள், வெளிநாட்டுக் குடியுரிமையுடையவர்கள், இரட்டைக்குடியுரிமை உடையவர்கள், வெளிநாடுகளில் வாழ்பவர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள், புலம்பெயர்ந்த உறவுகள் உங்கள் வீட்டிற்கு வருகைதர இருப்பின் அவர்களின் வருகையை பிற்போடச்செய்வது சிறந்த முடிவாகும். இல்லாவிடில் அவர்களின் வருகையை உங்கள் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அல்லது யாராவது சுகாதார வைத்திய உத்தியோகத்தருக்கு அறிவிப்பதுடன் அவர்கள் வருகை தந்த நாளிலிருந்து அவர்களுடன் நீங்களும் 02 வாரங்கள் (14 நாட்கள்) சுயதனிமைப்படுத்தலில் இருத்தல் வேண்டும்.
    மேற்கண்டவாறான சுய தனிமைப்படுத்தலுக்கு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியின் உதவியை நாடவும்.
  2. பொது ஒன்றுகூடல்கள்
     அனைத்து வணக்கத்தலங்கள், கலாச்சார நிகழ்வுகள், மதம் சார்ந்த நிகழ்வு, விளையாட்டு ஒன்றுகூடல்கள் போன்றவற்றிற்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
     மறு அறிவித்தல்வரை பூங்காக்கள், உணவகங்கள், மற்றும் சினிமாக்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
     உங்கள் பிள்ளைகளை தனியார் கல்வி நிறுவனங்கள், குழு வகுப்புக்கள், தனியார் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தனியார் பயிற்சிப் பட்டறைகள், முன்பள்ளிகள் போன்றவற்றிற்கு அனுப்புவதைத் தவிர்த்துக்கொள்ளவும்.
     உங்கள் வீட்டிற்குரிய விஷேசங்களை தள்ளிப்போடுங்கள் அல்லது உங்கள் வீட்டு அங்கத்தவர்களுடன் மட்டும். கொண்டாடி மகிழுங்கள்.
  3. உங்களுக்கு கொரோனா (ஊழுஏஐனு -19) நோய்கான அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால் சிகிச்சைக்காக உங்களுக்கு அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலையை நாடவும்.
  4. அவசியமற்ற பயணங்களை தவிருங்கள். பொதுப் போக்குவரத்து சேவைகளை பாவிப்பதை இயன்றளவு தவிர்க்கவும்.
  5. அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக ஆரோக்கியமான ஒருவர் மட்டும் வெளியில் சென்றுவருதல் நன்று.
  6. வெளியில் சென்று திரும்புபவர்கள் வீட்டிற்குள் உட்புகமுன் சவர்க்காரமிட்டு கைகள் கழுவுவதற்குரிய ஒழுங்கினை செய்தல்.
  7. வைத்தியசாலையில் உள்ள உங்கள் உறவுகளைப் பார்வையிடச் செல்வதை இயன்றளவு தவிர்க்கவும். உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு ஒருவர் மட்டும் வைத்தியசாலைக்கு சென்று விரைவாக திரும்புதல் மிகவும் நன்று.
  8. அரசாங்க திணைக்களங்கள் மற்றும் வங்கிகளுக்கு மிகவும் அத்தியவசியமான தேவைகள் அன்றி செல்வதை தவிருங்கள்.

உங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட ஒத்துழைப்பு இக்கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு அவசியமாகும்.

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்.
17.03.2020