தொற்றுள்ளோருடன் தொடர்புவைத்திருந்த 11,482 பேர் அடையாளம்

4 rea
4 rea

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளோருடன் தொடர்புகளைப் பேணிய 11 ஆயிரம் 482 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய மேலும் பலர் இருக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, சமூகப் பொறுப்புணர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், சுயமாக தனிமையாகி கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைக்  கருத்தில்கொண்டு வௌிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கும் பட்சத்தில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

கொரோனா தொற்றை இல்லாதொழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

வெளிநாட்டுக்குச் சென்றமைக்கான காரணம் அல்லது அங்கிருந்து நாட்டுக்குத் திரும்பியமைக்கான காரணம் தொடர்பில் தற்போது ஆராயப்படாது. எனவே, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்களைப் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும்.

நாட்டின் நிலைமையைக் கருத்தில்கொண்டு தேவை ஏற்படும் பட்சத்தில் 34 அரச நிறுவனங்களின் ஊழியர்களைக் கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்புக்குப் பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆகவே, அனைத்து அரச ஊழியர்களும் இதற்கு எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்” – என்றார்