அநுராதபுரம் சிறைக்குள் நடந்தது என்ன?

3
3

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற பெரும் களேபரத்தின்போது பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் அங்கிருந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டத்தையடுத்து அங்கு குழப்பமின்மை ஏற்பட்டது.

அங்குள்ள ஏனைய கைதிகள் தமக்குப் பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்து சிறைக்கூடங்களைத் தகர்த்துக்கொண்டு முற்றத்தில் ஒன்றுகூடினர்.

சிறைச்சாலையில் அறிவித்தலுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற கையடக்க ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி தங்களை வெளியில் விடுமாறு கோரி சுமார் 900 கைதிகள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டனர். அவர்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.

இதன்போது தடைகளையும் மீறி கைதிகள் பலர் தப்பியோட முயற்சித்தனர். அவர்களில் சிலரை மடக்கிப் பிடித்த பாதுகாப்புத் தரப்பினர் ஏனையோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தச் சம்பவத்தில் கைதிகளில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் ஒருவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏனைய மூன்று கைதிகளும் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.