தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக – அரசிடம் சிவமோகன் கோரிக்கை

3 e
3 e

“அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள கைதிகளினால் பாதுகாப்புக் கோரி ஏற்பட்டுத்தப்பட்ட முரண்பாட்டை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளை அரசு பாதுகாக்க வேண்டும்.”

– இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“அநுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சில கைதிகள் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக்கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏனைய கைதிகள் தமக்கான மருத்துவ பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தம்மை விடுவிக்குமாறு கோரி சிறைக்காவலர்களுடன் முரண்பட்டதாக அறியமுடிகின்றது.

இதன் காரணத்தால் கைதிகள் சிறைக்கூடங்களின் கதவுகளை உடைத்து பிரதான கதவை உடைக்க முற்பட்டபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனவும், இதன் காரணமாக மூன்று கைதிகள் படுகாயமடைந்த நிலையில் உயிர் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை அரசு உடனடியாக உறுதிப்படுத்தி அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும். அத்துடன் சிறைச்சாலைக்குள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் வீசப்பட்டதால் அங்குள்ள கைதிகள் அனைவரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ள கைதிகள் அனைவரையும் மனிதர்களாக எண்ணி மனிதாபிமானமாக இந்த அரசு நடத்த வேண்டும்” – என்றுள்ளது.