‘கொரோனா’த் தொற்று மேலும் அதிகரிக்கலாம் – அரசு எச்சரிக்கை

1 covidcurve 3 1
1 covidcurve 3 1

“எதிர்வரும் இரு வாரத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் உள்ளது. அதற்காக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்கள் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.”

– இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டின் அடுத்த இரு வாரங்களை சவால் நிறைந்த காலமாகமே நாம் கருதுகின்றோம். இந்த இரு வார காலத்தில் மக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும். முடிந்தளவு தனிப்பட்ட முறையில் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதே இவ்வாறான சூழலில் மக்கள் தம்மைப் பாதுகாக்க எடுக்கக் கூடிய சிறந்த முடிவாகும்.

சுகாதாரத் துறையினர் எந்தவித தடைகளும் இல்லாது தமது சேவையை முன்னெடுக்க சுகாதார சேவையாளர்களுக்கு இடமளிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு அவர்களுக்குச் செய்து கொடுத்துள்ளது. மக்களின் பங்களிப்பும் அதில் அவசியம்.

அடுத்த இரண்டு வாரகாலத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கருதுவதால் இப்போதே மருத்துவமனைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அவர்களை சிரமப்படுத்தாத வகையில் அவர்களுக்கான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் எந்த விதத்திலும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. சுகாதார பணிப்பகம் மற்றும் அரசாங்கம் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி தம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் நிலையில் வெகு விரைவில் நாட்டை எம்மால் இந்த சவால்களில் இருந்து விடுவித்துக்கொள்ள முடியும். அதற்காக சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – என்றார்.