கோட்டாபாய மீது குமார் குணரத்தினம் குற்றச்சாட்டு

kumar
kumar

இராணுவம் மற்றும் ஒட்டுக்குழுக்களின் உதவியுடன் ஆயிரக்கணக்கான மக்களை காணாமல் போகச் செய்தும், ஊடகவியலாளர்களையும், அரசியல் போராளிகளையும் கடந்த பயங்கரவாத ஆட்சியின் போது கொலை செய்தவரே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச என்று முன்னிலை சோசலிச கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரத்தினம் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்.பொது நூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

யாழ்ப்பாணம் ஆரவரங்கால் பகுதியில் வைத்து லலித், குகன் ஆகியோர் காணாமல் போகச் செய்யப்பட்டு 8 வருடங்கள் கடக்கப் போகின்றன. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஒக்கேடாபர் மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சாட்சி வழங்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவுக்கு யாழ்.நீதிமன்றத்தல் அறிவித்தல் கொடுக்கப்பட்டது.

அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதற்கான போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதை காரணம் காட்டி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் யாழ்.நீதிமன்றத்தில் ஆஜராக விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது முதலாளித்துவ முறைமையால் நீதிமன்றத்தின் நம்பிக்கையில் எமக்கு சந்தேகம் உள்ளது.

கோட்டாபாய ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். லலித், குகன் வழக்கில் சட்சி வழங்க யாழ்ப்பாணத்திற்கு வரமுடியாத கோட்டபாய ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் வரமுடியாது.

லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல இது. கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பிற மாவட்டங்களில் இருந்து ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினையாகும்.

இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், பொலிஸ் மற்றுமு; பாதுகாப்பு பிரிவால் கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் வெளிவராமல் காணாமலாக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கூட்டணி தலைவர் ஆகியோரிடம் சந்தித்து பேசியும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் அவர்களால் மேற்கொள்ளப்படவில்லை.

ஜனநாயகத்திற்கு எதிர்ப்பாக நடந்த ராஜபக்ச ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட சம்பவங்களே இவை. 2009 ஆண்டு புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிந்தது என்று சொல்லி, தமது ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்து வைத்திருந்தது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இராணுவத்திடமும், அரசுடன் இணைந்த துணைக்குழுக்களிடம் மட்டுமே ஆயுதங்கள் இருந்தது. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ராஜபக்ச அரசே முழுப் பொறுப்புக் கூற வேண்டும். அரச பயங்கரவாத சம்பவங்களே அவை.

எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று வர உள்ளது. இலங்கையில் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்ட கோட்டாபாய ராஜபக்சவே இப்போது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். கோட்டாயாப ராஜபக்ச இப்போது தேசிய பாதுகாப்பு பற்றியும், ஒழுக்கங்களை பற்றியுமே பேசுகின்றார். கோட்டாவின் ஒழுக்கமும், தேசிய பாதுகாப்பும் எப்படி இருக்கும் என்று நாங்கள் கடந்த காலத்திலேயே பார்த்துவிட்டோம்.

இவருடைய காலத்திலேயே வெள்ளைவான் கலாசாரம், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க போன்றோர் கொலை செய்யப்பட்டது. எக்னலிகொட போன்றவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள். வேறுபல ஊடகவியலாளர்கள், அரசியல் போராளிகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்தான் இன்று மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் நிற்கின்றார். இது தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.