அரச நிறைவேற்று அதிகாரிகள் போராட்டம் கைவிடப்பட்டது!

no strike
no strike

இலங்கை முழுவதும் கடந்த 05 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை உப குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், டொக்டர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, இன்று முதல் ஆரம்பிக்கப்படவிருந்த 02 பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளும் கைவிடப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது நிர்வாக அதிகாரிகள் சங்கம் ஆகியன தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிட்டுள்ளன.

தமது சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானத்தை பரிசீலித்ததன் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பை கைவிடும் தீர்மானத்தை எடுத்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், டொக்டர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பளப் பிரச்சினைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதால் இன்று முதல் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளதாக பொதுநிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ரயில் ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.