வவுனியாவில் அத்தியாவசியப் பொருட்கள் கொள்வனவு: மக்கள் கூட்டம் அலை போதல்!

DSC07131 300x169
DSC07131 300x169

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பத்து மணி நேரம் தளர்த்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கை கடந்த நாட்களை விட அதிகரித்து காணப்படுகிறது.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே அத்தியாவசிய பொருட்கள் மருந்துப் பொருட்கள் மரக்கறிகள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகருக்கு வருகை தந்துள்ளதுடன் வங்கிகள் வர்த்த நிலையங்களின் முன்னால் வரிசையில் காத்திருக்கின்றனர்

மேலும் வவுனியா நகர் வீதி, மீன் சந்தை, மரக்கறி சந்தை ஆகிய பகுதிகளுக்காக வீதியூடாக வாகனங்கள் செல்வதற்கும் பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டு மோட்டார்சைக்கிள் துவிச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்படுகின்றது.

வவுனியா பொலிஸார் போக்குவரத்து பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் இராணுவத்தினர் நிலமைகளை கட்டுப்படுத்துவதுடன் வவுனியா பொலிஸாரினால் விழிப்புணர்வு அறிவித்தலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் மரக்கறி வியாபாரத்திற்காக வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலத்தியாலயம் வவுனியா – கண்டி வீதி தமிழ் மத்திய மகா வித்தியலாயத்திற்கு முன்பாக நகரசபையினரினால் இடம் ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளது.

நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் நகரில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்படுவதாக தெரியவருகிறது.