உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியை கொடுப்பது யார் தெரியுமா?

who9
who9

உலகில் உள்ள மக்கள் அனைவரும் பொதுச் சுகாதார வசதிகளை பெற வேண்டும் என்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்யும் உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியை கொடுப்பது யார் தெரியுமா? 1948-ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகம் தொடங்கப்பட்டது.

இதன் நோக்கமே உலகில் உள்ள அனைவருக்கும் இயன்றவரை சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதே ஆகும். இந்த நிறுவனம் தொற்றுநோய் போன்ற கொடி நோய்களுடன் போராடுவதையே நோக்காக கொண்டது ஆகும்.

தற்போது கொரோனா வைரஸை எதிர்த்தும் போராடி வருகிறது. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதால் கொரோனா வைரஸ் நோயை தடுக்க தவறியதாகவும் WHO மீது அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டினார்.

மேலும் கொரோனா தொற்று விவகாரத்தில் மூடி மறைத்த உலக சுகாதார நிறுவனத்திற்கு தேவையான பெருமளவு நிதியை அமெரிக்காதான் வழங்கி வருகிறது.

எனவே செய்த தவறுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்க செய்வது அமெரிக்காவின் கடமையாகும் என டிரம்ப் கூறி அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்திற்கு, இதன் கீழ் உள்ள 194 உறுப்பு நாடுகளும் பல்வேறு அமைப்புகளும் நிதி வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு அதிக நிதியை அளிப்பது அமெரிக்கா ஆகும். 6.2 பில்லியன் டொலர்களை வழங்கி வருகிறது. அதாவது மொத்த நிதியில் 14.67 சதவீதம் ஆகும்.

அது போல் பில் மற்றும் மெலிந்தா அறக்கட்டளை நிறுவனம் 9.76 சதவீதமும் மேற்கண்ட அறக்கட்டளையின் மற்றொரு நிறுவனமான தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு திறனூட்டல் நிறுவனமான ஜி.ஏ.வி.ஐ 8.39 சதவீதம் நிதியை வழங்கி வருகிறது.

பிரிட்டன் 7.79 சதவீதமும் ஜெர்மனி 5.68 சதவீதமும் நிதியுதவியை வழங்கி வருகிறது. அமெரிக்காவுக்கு அடுத்த இந்த இரு நாடுகள் மட்டுமே WHOவின் மொத்த நிதியில் தலா 5 சதவீதத்திற்கு மேல் வழங்கி வருகிறது. அது போல் உலக வங்கி 3.42 சதவீதமும் ரோட்டரி இன்டர்நேஷனல் 3.3 சதவீதமும் ஐரோப்பிய ஆணையம் 3.3 சதவீதமும் ஜப்பான் 2.7 சதவீதமும் நிதி வழங்குகிறது.

உலக சுகாதார நிறுவனத்திற்கு 4 வழிகளில் நிதி கிடைக்கிறது. அதில் 80 சதவீதம் நிதியானது அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள், தன்னார்வல அமைப்புகள் மூலம் கிடைக்கின்றன. இவ்வாறு வழங்கப்படும் நிதி இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை முக்கிய தன்னார்வ பங்களிப்புகள் (Core Voluntary Contributions), குறிப்பிட்ட தன்னார்வ பங்களிப்புகள் ( Specified Voluntary Contributions) என்பதாகும்.

அதில் முக்கிய தன்னார்வ பங்களிப்புகளின் கீழ் பெறப்படும் நிதியை தேவைக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்வது. குறிப்பிட்ட தன்னார்வ பங்களிப்புகளின் கீழ் பெறப்படும் நிதி குறிப்பிட்ட விவகாரங்களுக்கு பயன்படுத்தப்படும்.

உலக சுகாதார அமைப்பின் கீழ் உறுப்பினராக ஒவ்வொரு நாடும் உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த கட்டணம் அந்த நாட்டின் மக்கள்தொகை மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை பொறுத்தது ஆகும்.