கோத்தபாயவை அரசியலில் இருந்து நீக்க எடுத்த முயற்சி தோல்வி – ஜி.எல்.பீரிஸ்!

gl peiris colombo press
gl peiris colombo press

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ஷவை அரசியலில் இருந்து நீக்குவதற்கு நீதித்துறையை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அத்தோடு நீதிமன்றம் சுயாதீனமாகச் செயற்பட்டமைக்கு தலை வணங்குகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமை சான்றிதழை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மூன்று நாட்களாக தொடர்ந்து இடம்பெற்று வந்த இந்த வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடுவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையிலேயே, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.