பணிப்புறக்கணிப்பை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கவும்- தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

ELection Dep
ELection Dep

தேர்தல் காலப்பகுதியில் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அரச ஊழியர்களின் ஒத்துழைப்பின்றி ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகரமாக நடாத்த முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க வேண்டாம் எனவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர், பேச்சுவார்த்தையூடாக தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கோரிக்கைகளை வெற்றி கொள்வதற்காக தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பளிக்கிறது. ஆனால் அனைத்து அரச துறைசார் ஊழியர்கள் ஒன்றிணைந்து செயற்படாவிடின் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொது மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் தேசிய தேவைகளை முறையாக நடத்த முடியாமல் போகும்.

எனவே தற்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இலங்கை புகையிரத ஊழியர்கள் இந்த தேர்தல் காலகட்டத்தில் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அதே போன்று ஜனாதிபதித் தேர்தல் கால எல்லைக்குள் தொடர் வேலை நிறுத்த போராட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அனைத்து அரச துறைசார் ஊழியர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொள்கின்றது. மறுபுறம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உத்தேசித்துள்ள அரச மற்றும் தனியார் துறைசார்ந்த ஊழியர்கள் தமது பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று 12வது நாளாகவும் ரயில் தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற குறிப்பிடத்தக்கது.