மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான கடைகளுக்கு 2 மாத வாடகை ரத்து !

05rf
05rf

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வருமானம் இழந்த சபைக்குச் சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்தோர் மற்றும் குத்தகைக்காரர்ககளின் நலன் கருதி இரு மாதங்களுக்கான வாடகை மற்றும் குத்தகைப் பணத்தினை விலக்களிப்பு செய்வதென மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 34 ஆவது சபை அமர்வானது இன்று வியாழக்கிழமை காலை மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

கொரொனா தொற்றின் அச்சம் காரணமாக இம்முறையும் நகர மண்டபத்தில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், சமுக இடைவெளியினைப் பேணியவாறு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியாசீலன், ஆணையாளர் கா.சித்திரவேல், மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டன.

இவ் அமர்வின் விசேட அம்சம்களாக பொது மக்களிடமிருந்து கிடைத்து வருகின்ற தெரு நாய்களின் தொல்லை தொடர்பான முறைப்பாடுகளின் காரணமாக, மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரியினால் நாய்கள் பதிவு கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக மாநகர எல்லைக்குள் வளர்ப்பு நாய்களை பதிவு செய்தல், பதிவு செய்யப்பட்ட நாய்கள் வீதியில் திரிந்து கைப்பற்றப்படும் பட்சத்தில் அதன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் வீதிகளில் திரியும் நாய்களை கைப்பற்றி ஓர் காணியில் அடைத்து பராமரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக முதல்வர் சபையில் அறிவித்தார்.

அத்துடன் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சப்ரிகம வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மாநகர சபையினால் நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த திட்டத்தின் செலவுகளை முகாமை செய்வதற்கும் ஏதுவாக 2020க்கான பாதீட்டில் குறை நிரப்பு மதிப்பீடாக உள்வாங்கி இவ் எதிர்பார்க்கப்படும் வருமானம் கிடைக்கப் பெறும் வரை சபை நிதி மூலம் இதற்கான செலவுகளை மேற்கொள்வதற்குமென மாநகர முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவானது சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வருமானம் இழந்த சபைக்குச் சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்தோர் மற்றும் குத்தகைக்காரர்கள் அனர்த்த கால மாதங்களுக்கு முற்பட்ட மாதம் வரை வாடகை,குத்தகை இடங்களுக்கான குத்தகைத் தொகையினை நிலுவையின்றி முழுமையாக செலுத்தியிருக்கும் பட்சத்தில் அடுத்த இரு மாதங்களுக்கான வாடகை மற்றும் குத்தகைப் பணத்தினை விலக்களிப்பு செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.