பொலிஸாரின் வன்முறைகளுக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்!

5e0d72a49af8e 5e0d613787905 police
5e0d72a49af8e 5e0d613787905 police

அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்ட் வெள்ளையின பொலிஸ்காரர் ஒருவரால் முழங்காலினால் கழுத்து நசுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து அமெரிக்க உட்பட உலகின் பல பாகங்களிலும் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் வெளியிடும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை முன்னிலை சோசலிஷக் கட்சியால் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக அமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிராக ஆரம்பத்திலேயே பொலிஸாரினால் நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்திருக்கும் கண்டனத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கண்டனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“மக்கள் அமைதியான முறையில் கூடுவதற்கான சுதந்திரத்துக்கு தேவைக்கமைவாக ஏதேனும் கட்டுப்பாடுகள் காணப்படுமாயின், முதலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தாமாகவே கலைந்து செல்வதற்கு வாய்ப்பொன்று வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.

மாறாக அமைதிவழியில் போராடியவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.

கடந்த காலங்களிலும் இலங்கையில் அதிகாரத்திலிருந்தவர்களால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவர்கள் மீது தேவையற்ற வன்முறைகள் அல்லது தாக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதுடன், அவற்றுக்கு நீதியும் வழங்கப்படவில்லை” – என்றுள்ளது.