ஏழைக் குழந்தைகளுக்காய் வாழ்ந்த தெய்வம்; சிவத்தமிழ் செல்வியின் நினைவுநாள் இன்று!

thankamma
thankamma

தமிழுக்கும் சைவத்திற்குமாக வாழ்ந்துவிடாமல் ஏழைக் குழந்தைகளின் வாழும் தெய்வமாக நின்று பணி செய்த சிவத் தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 12ஆவது நினைவு நாள் இன்றாகும். 

ஈழத்தில் வாழும் தெய்வமாக மதிக்கப்பட்ட தங்கம்மா அப்பாக்குட்டி, எல்லோராலும் அன்புடன் அம்மா என்று அழைக்கப்பட்டார். பொதுச்சேவைக்கு இலக்கணமாக அமைந்தது இவரது வாழ்வு. 

மொழிக்கும் சமயத்திற்கும் ஆற்றும் தொண்டைக் காட்டிலும் ஏழைக்கு ஆற்றும் பணியே இறைவனுக்கு ஆற்றும் பணி என்பதை தனது வாழ்வு நெறி ஊடாக எடுத்துக்காட்டியர் சிவத் தமிழ் செல்வி. 

ஈழத்தின் யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் 1925இல் பிறந்த இவர், அக்காலத்தில் அமெரிக்க மிசனெரிமாரின் மல்லாகம் அமரெிக்க மிசன் பாடசாலையில் தனது கல்வியை கற்றுள்ளார். 

1946இல் ஆசிரியர் பணியில் இணைந்து கொண்ட தங்கம்மா அப்பாக்குட்டி, 1952ஆம் ஆண்டில் சைவத்தையும் தமிழையும் காற்று பால பண்டிதராக தேர்வடைந்தார். 1958இல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டத்தையும் பெற்றிருந்தார். 

31ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்த தங்கம்மா அப்பாக்குட்டி, தனது பணியில் நிறைவுக் காலத்தில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 12 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய நிலையில், 1976இல் ஓய்வு பெற்றார். 

யாழ்ப்பாணத்தில் இறைவழிபாட்டை வளர்த்தெடுக்கும் சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் தங்கம்மா அப்பாக்குட்டிக்கு பெரும் பங்குண்டு. சிறிய ஆலயமாக காணப்பட்ட தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தை கட்டி எழுப்பி ஆலயப்பணியுடன் சமூகப் பணியும் ஆற்றினார்.

‘சிவத்தமிழ்ச் செல்வி’, என்றும் ‘துர்க்கா புரந்தரி’ என்றும் அழைக்கப்பட்ட தங்கம்மா அப்பாக்குட்டி எழுதிய கந்தபுராண சொற்பொழிவு என்ற நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்டது. இவர் பல அறநெறி நூல்களை எழுதியும் வெளியிட்டும் உள்ளார். 

ஆலயம் என்பது இறைபணியை ஆற்றுவதுடன் சமூகப் பணியையும் ஆற்ற வேண்டும் என்பதற்காக துர்க்கா மகளீர் இல்லத்தை நிறுவி, ஆதரவற்ற ஈழக் குழந்தைகளுக்கு வாழ்வளித்தார். ஈழப் போரில் ஆதரவிழந்த வயோதிபர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தார். 

நடமாடும் தெய்வமாக வாழ்ந்து, தொய்வத்திற்கும் மக்களுக்கும் தொண்டாற்றி மறைந்த சிவத் தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியை இன்றைய இளைய தலைமுறையினர் நினைவு கூருவதுடன் அவர் காட்டிய வாழ்வு நெறியில் பயணிக்க வழிப்படுத்துவோம். 

தமிழ்க்குரலுக்காக தீபன்