திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு ; முழு வழக்கையும் விவாதிப்பதற்கு உத்தரவு

IMG 0619
IMG 0619

மன்னார் திருக்கேதீச்சரம் வளைவு தொடர்பான வழக்குகளில் இரண்டு குற்றவியல் வழக்குகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்திலும், எழுத்தாணை சம்பந்தமான வழக்கு மன்னார் மேல் நீதி மன்றத்திலும் இன்று(16) காலை பத்து மணியளவில் மேல் நீதிமன்ற நீதிபதி திரு. சஹாப்தீன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

மன்னார் மேல் நீதி மன்றத்தில் எழுத்தாணை மீதான வழக்கில் 23 ஆம் எதிர்மனுதாரரான திருக்கேதீச்சர ஆலயத்தினுடைய இணைச் செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் சார்பிலும் 24 ஆவது எதிர்மனுதாரரான திருக்கேதீச்சர ஆலயம் சார்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.எம்.ஏ.சுமந்திரன்,சட்டத்தரணிகள் திரு சயந்தன், எஸ்.கே.புரந்திரன், திரு. கணேசராஜன், ராகுல் , செல்வி.புராதணி, தர்மராஜ் வினோதன், ஆகியோரும் முன்னிலையாகியிருந்தனர்

எதிர் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியான்சி,அரச குலரெட்ண அவர்கள் முன்னிலையாகியிருந்தார்.

ஒன்று தொடக்கம் 22 வரையான எதிர்மனுதாரர்களான மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் சார்பில் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் அவர்கள் ஆஜராகியிருந்தார்.

இன்றைய தினம் வழக்கின்படி எதிர் மனு தாரர்களின் ‘தலையங்கம்’ திருத்துவதற்கு நீதி மன்றம் அனுமதியளித்திருந்தது

தலையங்கம் திருத்தியதன் பின்பு திருத்தப்பட்ட தலையங்கத்திற்கு ஆட்சேபனை அளிப்பதற்காக 23ம் 24ம் எதிர்மனுதாரர் சார்பில் ஆட்சேபனை அமைப்பதற்கு 13-7-2020 திகதியும்

அதற்குரிய மறு ஆட்சேபனையை மனுதாரர்கள் சார்பில் அமைப்பதற்கு 26-8-2020 திகதியும் வழங்கப்பட்டுள்ளதுடன்

திருக்கேதீச்சரம் வளைவு உடைப்பு சம்பந்தமான முழு வழக்கையும் விவாதிப்பதற்காக 26-10-2020 திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

மேலும் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் மன்னார் பொலிசாரால் மேலதிக அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதன்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காகவும் எதிர்வரும் 10ம் மாதம் வரையான காலப்பகுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.