தமிழ் சமூகத்தில் இருந்து வன்முறைகள் எழுவதை தடுக்க முடியும்-சி .வி

15 urt
15 urt

தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கிவிட்டால், தமிழ் சமூகத்தில் இருந்து வன்முறைகள் எழுவதை தடுக்க முடியும் என சிங்களத் தலைவர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுசெயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் காலம் நெருங்கிவந்திருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வாராந்த கேள்வியொன்றுக்கு பதில் வழங்கி அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களது பிரச்சினைகளை சிங்கள மக்களும் தலைவர்களும் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்காக, இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகளவில் மேற்கொண்டது.

தற்போது அண்மையில் நடத்தப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து, புதிய வகையான பயங்கரவாத அச்சுறுத்தல் ஒன்று உருவாகி இருக்கிறது.

இந்த புதிய, கொடூரமான அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காகவே படையினர் தயார்ப்படுத்தப்படுவர் என்பதோடு, தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கிவிட்டால், தமிழ் சமுகத்தில் இருந்து வன்முறைகள் எழுவதை தடுக்க முடியும் என சிங்களத் தலைவர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

இதன் ஊடாக தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது” என்று விக்னேஸ்வரன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.