கோட்டாவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

1 aya 2
1 aya 2

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த வழக்கு விசாரணைகள் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக விசேட மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபாய் அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விஷேட மேன்முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான எல்.டி.பி.தெஹிதெனிய, எஸ். துறைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் விசாரத்து வருகின்றனர்.

இதேவேளை, இதற்கு முன்னதாக இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபாய் பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் நிரந்தர விசேட மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது