ஆற்று மணல் அகழ்விற்கு எதிராக மகிலவெட்டுவானில் போராட்டம்

mahilavedduvan
mahilavedduvan

மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று, மகிலவெட்டுவானில் ஆற்று மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படக் கூடாதென வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

மகிலவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மயிலவெட்டுவான் உப்போடை வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள் ஆகியோரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.

மயிலவெட்டுவான்- வீரக்கட்டு பகுதியில் ஆற்று மணல் அகழ்வதற்கு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் 10பேர் உட்பட 25 பேருக்கு விஷேட அனுமதி வழங்குவதற்கான பெயர் விபரங்களை நீர்ப்பாசனத் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கடந்த 2ஆம் திகதி, புவிசரிதவியல் அளவை, சுரங்கங்கள் பணியக மட்டக்களப்பு மாவட்ட பொறியிலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் குறித்த நடவடிக்கையினைக் கண்டித்தே கவனயீர்ப்பு போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

“கடந்த காலங்களில் மகிலவெட்டுவான் ஆற்றில் மணல் அகழ்வதை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் எமது கோரிக்கையை ஏற்று மணல் அகழ்வதற்கான அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான தடையின் மத்தியில் மீண்டும் மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை உடனடியாக தடை செய்யுமாறு உரிய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்” என மயிலவெட்டுவான் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி இலட்சுமி யோகராசா குறிப்பிட்டுள்ளார்.