சீனத் தூதரகத்தை 72 மணிநேரத்துக்குள் மூட டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு !

106116326 1567783424472gettyimages 1152687847
106116326 1567783424472gettyimages 1152687847

அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கவும், ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தை 72 மணிநேரத்துக்குள் மூட ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்ட நிலையில் எதிர்காலத்தில் மேலும் பல சீனத் துணைத் தூதரகங்களை மூடும் வாய்ப்பை மறுக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், சீனத் தூதரகங்களை மூட உத்தரவிட்டுள்ளீர்களா என்று நிருபர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு ட்ரம்ப் பதில் அளிக்கையில், “ஆமாம், ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகம் மூடப்பட உள்ளது. இன்னும் கூடுதலாக சீனத் தூதரகங்கள் மூடப்படவும் சாத்தியங்கள் இருக்கின்றன என்பதையும் நான் மறுக்கவில்லை.

ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அங்கு தீப்பிடித்தது, அதனால் மூடிவிட்டோம் என நினைத்திருந்தோம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அங்குள்ள ஆவணங்கள் எரிக்கப்பட்டதாகவே நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெய்ஜிங்கில் உள்ள சீன வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் அளித்த பேட்டியில் கூறுகையில்,

“ஹூஸ்டன் சீனத் தூதரகம் மூடப்பட உள்ளது. இது நியாயமற்ற, கண்மூடித்தனமான நடவடிக்கை. இது அமெரிக்கா-சீனா உறவில் பெரும் அழிவை ஏற்படுத்தும். இந்தத் தவறான முடிவை உடனடியாக அமெரிக்கா வாபஸ் பெற வலியுறுத்துகிறோம். இதற்குப் பதிலடியாக சீனா உறுதியாக நடவடிக்கை எடுக்கும்.

அரசியல் ரீதியாக ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இதைப் பார்க்கிறோம். அமெரிக்கா, சீனா இடையிலான உறவில் சர்வதேச சட்டங்களை தீவிரமாக அமெரிக்கா மீறுவதாகவே பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.